பெற்ற மகளிடம் தவறாக நடந்துகொண்டதாக முன்னாள் கணவர் மீது பொய் புகார்..: பெண்ணின் மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெற்ற மகளிடம் தவறாக நடந்துகொண்டதாக முன்னாள் கணவர் மீது பொய் புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, கணவன்-மனைவி, கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின், இரண்டு பெண் குழந்தைகளும், கணவன் பராமரிப்பில் உள்ளனர். ௧௧ வயதான மகளுக்கும், தந்தைக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக, சென்னை, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில், தாய் புகார் அளித்தார். விவாகரத்து பெற்ற பெண் அளித்த புகாரின் பேரில் முன்னாள் கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி முன்னாள் கணவர் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

சிறுமியின் தாய் முன்னாள் கணவர் மீது பொய் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, முன்னாள் கணவருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி சிறுமி அளித்த வாக்குமூலத்தை சுட்டிகாட்டி மனுதாரருக்கு எதிரான போக்ஸோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அப்போது, குழந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக தாய், இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி, குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் தவறாக பயன்பட கூடாது என கூறி, பொய் புகார் அளித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இதி ஒரு பாடமாக இருக்கட்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: