சங்கராபுரம் ஊராட்சி காரைக்குடி நகராட்சியுடன் இணைப்பு... அமைச்சர் பாஸ்கரன் உறுதி

காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சியை காரைக்குடி நகராட்சியுடன் இணைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார். காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் பொதுசுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரபணிகள் துணை இயக்குநர் யசோதாமணி வரவேற்றார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் முகாமை துவக்கி வைத்து, கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரம் உள்பட பல்வேறு உபகரணங்களை வழங்கினார். முன்னாள் எம்.பி செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ சோழன்சித பழனிச்சாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ, முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடி, மாவட்ட பாம்கோ துணை தலைவர் மெய்யப்பன், ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட பாம்கோ இயக்குநர் இயல்தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பாஸ்கரன் கூறுகையில், தமிழக அரசு பல மக்கள் நலதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. சுகாதார துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் குடிமராமத்து செய்ய நடவடிக்கை எடுத்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன. குடிமராமத்து பணியில் சிவகங்கை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. வரத்து கால்வாய் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. சங்கராபுரம் ஊராட்சியை பொறுத்தவரை மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சியாக உள்ளது. இப்பகுதியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக காரைக்குடி நகராட்சியுடன் இணைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தவிர நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்துடன் இந்த ஊராட்சி பகுதிகளும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: