×

கடையம் அருகே அச்சன்குளத்தில் தரமின்றி மதகு கட்டுமான பணிகள்

கடையம்: கடையம் அருகே அச்சன்குளத்தில் தரமின்றி கட்டப்பட்ட மதகு கரையை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையம் அருகே கருத்தபிள்ளையூரில் அச்சன்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 80 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அச்சன்குளத்திற்கு கடனா நதி அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த குளத்தில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக ஒரே ஒரு மதகு உள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டு உலக வங்கி நிதியுதவியுடன் நீர் நிலவள திட்டத்தின் கீழ் குளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதில் குளத்து கரைகளை பலப்படுத்தி உயர்த்துதல் மற்றும் மதகு கரைகளை புதுப்பித்தல் பணி நடைபெற்றது. அப்போது நன்றாக இருந்த மதகு கரைகளை முழுவதுமாக இடிக்காமல் பாதியளவில் மட்டுமே இடித்து அதற்கு மேல் பஞ்சர் போடுவதுபோல் சிமென்ட் பூசினர்.

இதனால் பணிகள் முடிந்ததுபோல் இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் மேடு பள்ளம் ஏற்பட்டு விரிசல் விழுந்து காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் குளம் நிரம்பும்போது மதகு கரைகள் பலமிழந்து உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மதகு பகுதிகளில் ஷட்டரும் பொருத்தப்படவில்லை. மதகு பகுதி முழுவதும் சிமென்ட் கட்டிகள் ஆக்கிரமித்துள்ளன. குளத்தின் வெளி மதகு கரைகள் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்த மதகு பற்றி அம்பை உபகோட்ட பொதுப்பணித்துறையினரிடம் கேட்டால் இது எங்கள் பணி அல்ல. இந்த பணி நாங்குநேரி சிற்றாறு வடி நில உபகோட்டத்தால் கட்டப்பட்டது என்கின்றனர். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. அதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்த மதகு கரைகளை அகற்றி புதிதாக தரமான மதகு கரைகள் அமைக்க வேண்டும், என்றனர்.

Tags : Religious construction works
× RELATED வடகிழக்கு பருவமழை காலத்தில்...