×

முகவரி, மொபைல் எண் மாறி போனதால் பெண் குழந்தை உதவித்தொகை ரூ.4 கோடியை திருப்பி அனுப்பிய கொடுமை

திண்டுக்கல்: முகவரி, மொபைல் எண் மாறி போனதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தை உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் முதிர்வு தொகை ரூ.4 கோடியை அரசுக்கே திருப்பிய அனுப்பிய கொடுமை நடந்துள்ளது. பெற விரும்பும் பெற்றோர்கள் வந்தால் வழங்கவும் சமூகநலத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. தமிழக அரசு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50 ஆயிரமும், 2 பெண் குழந்தைகள் பிறந்து இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கு முதல் பெண் குழந்தைக்கும், இரண்டாவது பெண் குழந்தைக்கும் இடைவெளி 3ஆண்டுகள் இருக்க வேண்டும். அதாவது இரண்டாவது பெண் குழந்தைக்கு 3 வயதாகி இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை இருப்பவர்கள் ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழும், குடும்ப கட்டுப்பாடு சான்றிதழும் சமர்பிக்க வேண்டும். இந்த பதிவு அந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது, வட்டி மற்றும் போனஸ்சுடன் திருப்பி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரைக்கும் முதிர்வு தொகை திருப்பி அந்த பெண் குழந்தையிடம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் உண்மையா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்புதான் உறுதி செய்வார்கள்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கான முதிர்வு தொகை தேதி முடிந்தவர்கள், அவர்கள் சான்றிதழில் குறிப்பிட்ட விலாசத்திற்கு தொகைக்கான செக்கை வாங்கி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கடிதங்கள் சம்பந்தப்பட்ட விலாசங்களில் ஆட்கள் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. மொபைல் எண்ணும் 15 ஆண்டுகளில் சிலருக்கு மாறி போய்விட்டது. இதுமாதிரி 473 பேருக்கு திரும்பி வந்துள்ளது. இதன் தொகை மட்டும் ரூ.4 கோடியாகும். இந்த தொகையை வழங்க முடியாததால் அரசுக்கே சமூகநலத்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த தொகையை மீண்டும் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட சான்றிதழ்தாரர்கள் மனுக்கள் கொடுத்தால் அவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி முத்துமீனாள் கூறியதாவது, ‘திண்டுக்கல் மாவட்டத்தில் பல பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் உதவித்தொகைக்காக பதிவு செய்துள்ளனர். இவர்கள் அளித்த முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்குத்தான் நாங்கள் அனுப்பும் தகவல்கள் செல்லும். ஆனால் பலர் தங்களது இல்லங்களை மாற்றி விட்டதுடன், மொபைல் எண்களையும் மாற்றி விட்டனர். இதனால் 3 வயது குழந்தைக்கு 18 வயதாகும் போது, முதிர்வு தொகையான பணத்தை பெற முடியாமல் நாங்கள் அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது. இதுமாதிரி பல கோடிகளை நாங்கள் திருப்பி அனுப்பியுள்ளோம். முதிர்வு தேதி முடிந்து, முதிர்வு தொகையை பெற விரும்பும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் உடனடியாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்திற்கு தக்க சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். அவ்வாறு வந்தால், நாங்கள் அரசுக்கு திருப்பி அனுப்பிய தொகையை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்’ என்றார்.

Tags : Female child, scholarship
× RELATED வாணியம்பாடியில் பெண் நீதிபதி உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி