×

மது, கஞ்சா, பாக்கு சர்வ சாதாரணம்: போதையில் எதிர்காலத்தை இழக்கும் மாணவர்கள்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதை வஸ்துக்களை 6ம் வகுப்பு மாணவர்களே பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் மீது மாணவர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆசிரியர்களிலும் சிலரை தவிர பெரும்பாலோனோர் குழந்தைகளை அக்கறையுடனும், கண்டிப்புடனும், கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்தனர். காலையில் வகுப்புகள் தொடங்கும் முன்பு நல்ஒழுக்கத்திற்கு என தனி பாடமே நடத்தப்பட்டு வந்தது.

தற்போது, ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது. திட்டக்கூடாது என சட்டங்கள் பேசி குழந்தைகளின் உறவினர்களே புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வதால், தற்போது ஆசிரியர்கள் மாணவர்களை கண்டு கொள்வதில்லை. விளைவு, கல்லூரி மாணவர்கள் சிலரிடம் மட்டும் இருந்த போதை பழக்கம், 6 ம் வகுப்பு மாணவர்களிடம் கூட வேர்விட்டு பரவி உள்ளது. நாகர்கோவில் மட்டுமின்றி மாவட்டத்தின் கிராம பகுதிகளில் கூட திருட்டுத்தமாக மது அருந்திய நிலை மாறி, பள்ளிச் சீருடையுடன் மதுபான கூடங்களில் மது அருந்துவதும் சகஜமாகி விட்டது. இதில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அனைத்து மட்டத்திலும் உள்ள சில தனியார் பள்ளி மாணவர்களிடமும், இந்த பழக்கம் வேகமாக பரவி வருகிறது. ஒரு சில நேரங்களில் போலீசார் கையும் களவுமாக பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தாலும், மீண்டும் அவர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர். மது அருந்தினால் வாடை வரும் என்பதால், போதை பாக்குகள், கஞ்சா புகைத்தல், சிரப்புகளை அருந்துதல், ரசாயனம் கலந்த பசையை முகர்தல், போதை மாத்திரைகள் என போதையின் பிடியில் சிக்குகின்றனர்.

கிடைப்பது எப்படி?: சினிமாவில் போதை காட்சிகளை பார்த்து அதனால், ஈர்க்கப்படும் மாணவர்கள் தங்களது வீட்டின் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் அல்லது இளைஞர்களிடம் பழகுகின்றனர். அவர்கள் மூலம் மாணவர்களுக்கு போதை பொருட்கள் கிடைக்கிறது. இதில், முதலில் போதையில் சிக்கும் மாணவர், அடுத்து தனது நண்பர்களிடம் போதை பற்றி கூறுவதுடன், தன்னுடன் பேச வேண்டும் என்றால், கஞ்சா புகைக்க வேண்டும், என கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மாணவர்கள் பலரும், தனது வகுப்பு தோழர்கள் மூலம் போதை பழக்கத்திற்கு உள்ளாகின்றனர். இதில் போதையில், சிக்கும் மாணவர்கள் பாலியல் ரீதியாகவும், இளைஞர்கள் பயன்படுத்து கின்றனர். மேலும் குரூப்பிசம் உருவாக்கி அடி தடி, கத்தி குத்து, மோதல் போன்ற சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தையே இழக்கின்றனர்.

பஸ்சில் போதை மிட்டாய் பயன்படுத்திய மாணவர்கள்

கடந்த வாரம் ஒரு அரசு பஸ்சில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4 மாணவர்கள், மிட்டாய் போன்ற இரு மாத்திரைகளை நாவிற்கு அடியில் வைத்து சுவைத்து போதை ஏற்றியதை கண்ட பெரியவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பள்ளி வகுப்பறைகளுக்கு உள்ளேயே 6 மற்றும் 7 வது பயிலும் மாணவர்கள் இதுபோன்று வாடை வராத போதை மிட்டாய் பயன்படுத்தி ஆசிரியர்களிடம் சிக்கிய சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் பல பள்ளிகளில் நடைபெற்று உள்ளன. நாகர்கோவிலில் இடலாக்குடி, வடசேரி, புதுக்குடியிருப்பு, பள்ளிவிளை, ஒழுகினசேரி, ராமன்புதூர் பகுதிகளில் இளைஞர்கள் மூலம் மாணவர்களுக்கு போதை பொருட்கள் கிடைப்பது தெரிய வந்துள்ளது.

கவுன்சிலிங்

இதுபற்றி பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், நாங்கள் போதை மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கிறோம். ஆனாலும், இதனை சம்மந்தபட்ட மாணவர்களின் பெற்றோர் சிலர் ஒப்புக் கொள்வதில்லை. எங்களை விரோதியாக பார்க்கின்றனர். போதைக்கு அடிமையான தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக பேசுகின்றனர். விளைவு, குறிப்பிட்ட மாணவர்கள் சமூக விரோதியாக மாறி, பின்னர் சம்மந்தப்பட்டவர்கள் வருந்திய சம்பவங்களும் நடந்துள்ளன.

அறிகுறிகள் என்ன?

மாணவர்கள் தொடர்ந்து சோர்வாக காணப்பட்டாலோ சரியாக உணவு சாப்பிடவில்லை என்றாலோ ஏதோ பிரச்னை உள்ளது என்பதனை பெற்றோர் புரிந்து கொண்டு, அன்புடன் அவர்களுடன் பேசி அவர்களது நட்பு வட்டாரத்தை கண்காணிக்க வேண்டும். அவர்களது உறக்கம் சீரின்றி இருத்தல், சோர்வாக, வீட்டில் யாரிடமும் கலகலப்பாக பேசாமல் இருப்பது போன்றவை அறிகுறிகள்.

Tags : Drug students
× RELATED கோவையில் பயங்கரம்: பள்ளி...