மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் அம்பலப்படுத்தி வருவதால் அவர் வேட்டையாடப்படுகிறார் : பிரியங்கா காந்தி கண்டனம்

புதுடெல்லி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் மீதான சிபிஐ நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தோல்விகளை உண்மையாக பயமின்றி ப.சிதம்பரம் அம்பலப்படுத்தி வருவதால் அவர் வேட்டையாடப்படுகிறார் பிரியங்ஙகா தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், உண்மைக்காக அதன் விளைவுகளை சந்திக்க தயார் என்று பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உள்துறை, நிதியமைச்சர், எம்.பி. என நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர் ப.சிதம்பரம் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்த அடுத்த 3 மணி நேரத்தில் சிபிஐ அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாரானது. 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்தனர். இதனால், சிதம்பரம் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது.

ஆனால் வீட்டில் அவர் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அடுத்த சில நிமிடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் ப.சிதம்பரத்தை தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். இதனையடுத்து ப.சிதம்பரம் 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டுமென சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. ஆனால் ப.சிதம்பரம் ஆஜராகாத நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் 3-வது முறையாக வந்தனர். ஆனால் ப.சிதம்பரம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories: