×

3-வது முறையாக ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள்... வீட்டில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய அதிகாரிகள்

புதுடெல்லி: டெல்லியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வந்துள்ளனர். 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டுமென சிபிஐ நோட்டீஸ் ஒட்டியிருந்த நிலையில் ப.சிதம்பரம் இன்னமும் ஆஜராகவில்லை. இதனையடுத்து ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் 3-வது முறையாக வந்துள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு மொரிஷியசில் இருந்து ரூ.305 கோடி அன்னிய முதலீடு பெறப்பட்டது.

இதற்காக, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழை முறைகேடாக பெற்று தருவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் பேரம் நடந்ததாகவும், இந்த காரியத்தை முடிக்க பெரும் தொகை கமிஷனாக பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், ‘ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக வலுவான ஆதாரங்கள் இரு்க்கின்றன. மேலும், வழக்கு விசாரணையின் போது ப.சிதம்பரம் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை, அதனால், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் அனுமதிக்க வேண்டும்,’  சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவித்தன.

இதனால், இந்த வழக்கில் சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் தன்னை கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், பல மாதங்களாக அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மீதான விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில்  டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனில்கர் தீர்ப்பு அளித்தார்.

அதில், ‘‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவருடைய மனு நிராகரிக்கப்படுகிறது. இருப்பினும், இதில் மேல்முறையீடு செய்வதற்காக அவருக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது,’’ என நீதிபதி உத்தரவிட்டார். டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்த அடுத்த 3 மணி நேரத்தில் சிபிஐ அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாரானது. 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்தனர்.

இதனால், சிதம்பரம் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் வீட்டில் அவர் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அடுத்த சில நிமிடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் ப.சிதம்பரத்தை தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். இதனையடுத்து ப.சிதம்பரம் 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டுமென சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. ஆனால் ப.சிதம்பரம் ஆஜராகாத நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் 3-வது முறையாக வந்தனர். ஆனால் ப.சிதம்பரம் இல்லாத காரணத்தால் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Tags : Former Finance Minister, P Chidambaram, CBI Officers, INX Media, Abuse Case, Bail
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்