திருட்டு வழக்கு பதிவு செய்வதாக கூறி தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

சென்னை: தண்ணீர் லாரிகள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதாக கூறி வருவாய் மற்றும் காவல்துறையை கண்டித்து, டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 15 ஆயிரம் தனியார் தண்ணிர் லாரிகள் ஈடுபட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 4,500 லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

சென்னை புறநகர் பகுதியான வேளச்சேரி, பள்ளிக்கரணை, கந்தன்சாவடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், படூர், தாழம்பூர், சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்களுக்கும், இப்பகுதிகளில் உள்ள சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் திருப்போரூர், தண்டலம், சிறுசேரி, தாழம்பூர், நாவலூர், இள்ளலூர், பொன்மார், பனங்காட்டுப் பாக்கம், வெண்பேடு, காயார், ஆலத்தூர், பையனூர் ஆகிய இடங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காயார் காவல் நிலையத்தில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுத்ததாக கூறி தண்ணீர் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை கண்டித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை கண்டித்தும், நிலத்தடி நீரை கனிம வளத்தில் இருந்து நீக்கக் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் அறிவித்தார்.

இந்த போராட்டம் நீடித்தால் மென்பொருள் நிறுவனங்கள், ஓட்டல்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: