×

வழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ், டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  வழக்கு தொடர்ந்தவர்களில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ முடித்தோருக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி நியமனம் வழங்கலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: உடற்கல்வி பாடத்தில் டிப்ளமோ முடித்தேன். இதன்பின் உடற்கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ேறன். இதன்மூலம் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றேன். இதனிடையே, கடந்த 26.7.2017ல் சிறப்பாசிரியர் பிரிவில், காலியாகவுள்ள 632 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வில் பங்கேற்று 70 மதிப்பெண் பெற்றேன். பணி வழங்குவதற்கான சீனியாரிட்டி எனக்கு கிடைத்தது. இதன்படி சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன்.

அப்போது, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான கல்வியில் உயர்தகுதி பெற்றதற்கான சான்றிதழ் பெறவில்லை என கூறினர். ஓராண்டு வகுப்பான இந்த படிப்பு கடந்த 2004ல் கைவிடப்பட்டது என்பதை விளக்கினேன். இதன்பிறகு வெளியான தேர்வானவர்களின் பட்டியலில் என் பெயர் இல்லை. உரிய கல்வித்தகுதி பெறவில்லையென அதில் கூறப்பட்டுள்ளது. உரிய தகுதி இருந்தும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு முடிவுகள் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கு என்னை அழைக்கவும், எனக்கு உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனிநீதிபதி, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தெளிவாக இல்லை. முரண்பாடு உள்ளது. எனவே, உடற்கல்வி சிறப்பாசிரியர் நியமனம் தொடர்பான  ஒட்டுமொத்த நடைமுறைகளையும் ரத்து செய்து கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரி மணிகண்டபிரபு தரப்பிலும், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டிஆர்பி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தரப்பில் அப்பீல் மனுவும், பணி நியமனத்தில் தங்களை பரிசீலிக்கக் கோரி பலரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: உடற்கல்வி சிறப்பாசிரியர் நியமனத்திற்கு உடற்கல்வி பிரிவில் சான்றிதழ் பெற்றோர் மற்றும் டிப்ளமோ படித்தோரது விண்ணப்பங்களையும் ஏற்கவேண்டும். இவர்களது தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்கனவே தேர்வானவர்களுடன் சேர்த்து இவர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே தேர்வு செய்யப்படாத யாரும் முன்னுரிமை கோர முடியாது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Prosecutors, Certificate, Diploma, Master of Physics, Icort Branch
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்