11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு சட்டவிரோத பார்களை மூடக்கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்: மதுரையில் நடந்தது

மதுரை: சட்டவிரோத பார்களை மூடக்கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 11 மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்  பங்கேற்றனர். அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத பார்களை மூட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்றனர். மதுரை அண்ணாநகரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.

டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதிரடி ஆய்வு என்ற பெயரில் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதை கைவிட வேண்டும். அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத பார்களை மூட வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் மாதம் ₹6 ஆயிரம் வழங்க வேண்டும். இறந்த பணியாளர் குடும்பத்தினரின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர். ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் உமா செல்வராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் நடேசன் மற்றும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்பட 11 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: