×

கோயில் இரும்பு லாக்கர் நகைகளுடன் குப்பையில் வீச்சு: சேத்துப்பட்டு அருகே பரபரப்பு

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சொந்தமான இரும்பு லாக்கர், தங்க நகைகளுடன் குப்பையில் வீசப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் கிராமம் மலை மீது பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ஜாகீர்தார்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அப்போது, கோயிலுக்கு சொந்தமான சுவாமி நகைகள் மற்றும் நாணயங்களை பாதுகாப்பாக வைக்க, ஜாகீர்தார்கள் கோயில் தர்மகர்த்தாவிடம் சுமார் 800 கிலோ எடையுள்ள ‘இரும்பு லாக்கரை’ வழங்கினர். இந்த இரும்பு லாக்கரை 3 தலைமுறை தர்மகர்த்தாக்கள், தங்கள் வீடுகளில் வைத்து கோயில் நகை மற்றும் நாணயங்களை பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதைய தர்மகர்த்தாவிடம் இருந்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் நாணயங்களை அறநிலையத்துறையினர் பெற்றுச் சென்றனர். ஆனால், இந்த லாக்கர் மட்டும் தர்மகர்த்தா வீட்டிலேயே இருந்தது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி அப்பகுதியில் உள்ள குப்பையில் இரும்பு லாக்கர் கிடப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர், பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர்சென்று, குப்பையில் இருந்த லாக்கரை மீட்டனர்.
விசாரணையில், தர்மகர்த்தாவின் வாரிசுகள் தற்போது தங்கள் இடத்தில் வீடு கட்டி வருவதால், இந்த பெட்டியை பராமரிக்க முடியாமல் குப்பையில் வீசியிருக்கலாம் என தெரியவந்தது. பின்னர், இரும்பு லாக்கரை அதிகாரிகள் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் வேலூர் தொல்லியல் துறை காப்பாட்சியர் சரவணன், தாசில்தார் சுதாகர், கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் லாக்கரை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர், அதனை உடைத்து பார்த்தபோது லாக்கரில் 43 கிராம் தங்கத்தாலி மற்றும் தங்க குண்டுகள், 3 கிராம் ஜிமிக்கி, பித்தளையால் ஆன 17 காசு மாலை, பழைய ஒரு பைசா, 2 பைசா, 3 பைசாக்கள், அலுமினிய காசுகள் 1.5 கிலோ ஆகியவை இருந்தது. இதையடுத்து, அவை போளூர் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.கோயிலுக்கு சொந்தமான லாக்கர் தங்க நகைகளுடன் குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Temple Iron Locker, Jewelry, Garbage, Chest
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...