×

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் உத்தரவு,..உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால், எந்த நேரத்திலும் அவர் கைதாகும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு மொரிஷியசில் இருந்து ரூ.305 கோடி அன்னிய முதலீடு பெறப்பட்டது. இதற்காக, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழை முறைகேடாக பெற்று தருவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் பேரம் நடந்ததாகவும், இந்த காரியத்தை முடிக்க பெரும் தொகை கமிஷனாக பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதேபோல், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், வாசன் ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் ₹2 ஆயிரத்து 262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், கார்த்தி சிதம்பரத்தின் ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கும் விளக்கம் கோரி அமலாக்கத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் குழு பட்டியலில் கார்த்தி சிதம்பரமும் இடம் பெற்றிருந்தார். இதையடுத்து, சிபிஐ.யும் அமலாக்கத் துறையும்  அவருக்கு அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்காத காரணத்தால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கார்த்தி சிதம்பரம்  கைது செய்யப்பட்டார். டெல்லி அழைத்து வரப்பட்ட அவர், பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதில், நீண்ட விசாரணைக்கு பின்னர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்நிலையில், ‘ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக வலுவான ஆதாரங்கள் இரு்க்கின்றன. மேலும், வழக்கு விசாரணையின்போது ப.சிதம்பரம் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை, அதனால், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் அனுமதிக்க வேண்டும்,’ எ சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவித்தன.  இதனால், இந்த வழக்கில் சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் தன்னை கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், பல மாதங்களாக அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மீதான விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில்  டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனில்கர் தீர்ப்பு அளித்தார். அதில், ‘‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. அவருடைய மனு நிராகரிக்கப்படுகிறது.

இருப்பினும், இதில் மேல்முறையீடு செய்வதற்காக அவருக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது,’’ என நீதிபதி உத்தரவிட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில், ப.சிதம்பரத்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘வழக்கு விசாரணை அனைத்துக்கும் சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் அழைத்த போதெல்லாம் ப.சிதம்பரம் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். மேலும், இதில் உயர் நீதிமன்றம் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கி உள்ளதால் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்,’ என அவர் கோரினார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் இல்லாததால் சிபிஐ ஏமாற்றம்
டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்த அடுத்த 3 மணி நேரத்தில் சிபிஐ அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாரானது. 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்தனர். இதனால், சிதம்பரம் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் வீட்டில் அவர் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அடுத்த சில நிமிடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளும் ப.சிதம்பரத்தை தேடி அவரது வீட்டுக்கு வந்தனர். சிதம்பரம் எங்கிருக்கிறார் என அதிகாரிகளுக்கு உறுதியாக தெரியாததால், அவர் எங்கிருக்கிறார் என்று தகவல் சேகரித்து வருகின்றனர்.

Tags : INX Media Abuse, P Chidambaram, Pre-Bail Appeal, Delhi Court Order, Supreme Court, Appeal
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...