மத்திய சென்னையில் பல ஆண்டாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொது மேலாளரை சந்தித்து தயாநிதி மாறன் எம்.பி மனு

சென்னை: மத்திய சென்னையில் பல ஆண்டாக நிலுவையில் உள்ள யானைகவுனி மேம்பால பணி மற்றும் ரயில் நிலையங்களில் கழிவறை கட்டும் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்பதை வலியுறுத்தி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயினை சந்தித்து மனு அளித்தார். பின்னர் தயாநிதி மாறன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:யானைகவுனியில் புதிய ரயில்வே மேம்பால பணி பல ஆண்டாக தாமதமாகி கொண்டே போகிறது. இதுகுறித்து துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு 5 முறைக்கு மேல், சட்டமன்றத்தில் பேசினாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக தற்போது ரயில்வே பொது மேலாளரிடம் பேசியபோது, விரைவில் பழைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்டும் பணி 2 மாதத்தில் தொடங்கப்படும் என்று உறுதியளித்தார். இதன்மூலம் 6 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு விடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். அதேபோல், வில்லிவாக்கம் புட்டமேடு ரயில்வே சுரங்கப்பாதை திட்டமும் தாமதமாகிறது. அந்த பணியும் விரைவில் தொடங்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்தார்.

நான், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சரிடம், ‘‘ஸ்வட்ச் பாரத் என்று இந்தியா முழுவதும் கழிவறைகளை கட்டுகின்றீர்கள். ஆனால், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை உள்ள ரயில் நிலையங்களில் கழிப்பறை வசிதிகளே இல்லை. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்,’’ என்றேன்.  இது தொடர்பாக பொது மேலாளாரிடம் தெரிவித்தபோது, உடனடியாக கழிப்பறைகள் கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பீக் அவரில் 2.30 நிமிடத்திற்கு ஒரு ரயில் வரும். ஆனால், புறநகர் ரயில்கள் 10 நிமிடத்திற்கு ஒன்று வீதம் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் நெரிசலில் பயணம் செய்கின்றனர். எனவே, மெட்ரோ ரயில் போல், புறநகர் ரயில்களை 2.30 நிமிடத்திற்கு ஒன்று வீதம் இயக்க வேண்டும். எம்.ஆர்.டி.எஸ் ரயில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில் கழிவறைகளே இல்லை. ஸ்வட்ச் பாரத் திட்டமே தோற்றுவிட்டது, என்று கேள்வி எழுப்பினோம். கண்டிப்பாக இதனை ஆவன செய்து, அடுத்த மாதம் இதே தேதியில் என்னையும், சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்று தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து, எழும்பூர் ரயில்நிலைய 7வது நடைமேடையில் எஸ்கலேட்டர் அமைக்க ₹2.5 கோடி நிதி ஒதுக்கினோம். ஆனால், எனக்கு பிறகு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட யாரும் அது தொடர்பாக கவலைப்படவே இல்லை. தற்போது அதையும் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்களில் போதிய மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும் கூறியுள்ளோம். அதையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். காஷ்மீரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் 3 வாரமாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய சட்டத்தின்படி ஒருவரை கைது செய்தால், 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று கைது செய்த காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதனை செய்யாமல், மக்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எமர்ஜென்சியை விட மோசமான நிலை அங்கே அரங்கேறியுள்ளது. எப்படியாவது ஆட்சியில், பதவி சுகத்தில் இருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உணர்வு வராது. தன்மானம் உள்ளவர்களுக்கு உணர்வு வரும், தன்மானமே இல்லாதவர்களுக்கு இந்த உணர்வு வராது. இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.துறைமுகம் தொகுதி எம்எல்ஏ சேகர்பாபு உடன் இருந்தார்.

Related Stories: