மாணவர்கள் மர்ம மரணம் தனியார் பல்கலையில் சிபிசிஐடி விசாரணை

சென்னை: கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் தனியார் பல்கலைகழகம் பொறியியல், மருத்துவம், கலை அறிவியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், நர்சிங், சட்டப் படிப்பு ஆகிய பாடப்பிரிவுகளுடன் செயல்படுகிறது. இங்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்ேவறு மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இவர்களுக்காக பல்கலை வளாகத்தில் விடுதி உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன், ஜூலை மாதங்களில்  பொன்னேரியை சேர்ந்த அனுபிரியா, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனுஷ்சவுத்ரி, கன்னியாகுமரியை சேர்ந்த ராகவ் ஆகிய மாணவர்கள் மர்மமான முறையில் பல்கலை விடுதியில் அடுத்தடுத்து இறந்தனர். இதனால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், தமிழக டிஜிபி இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று மதியம் சிபிசிஐடி எஸ்பி மல்லிகா தலைமையில், 20 பேர் கொண்ட போலீசார், மேற்கண்ட பல்கலைகழகத்திற்கு வந்து பதிவாளர், பல்கலை துணை இயக்குனர், துறை தலைவர்கள், பேராசிரியர்களிடம் துருவி துருவி விசாரித்தனர்.

இந்த விசாரணை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் தற்கொலை செய்த இடம், விடுதி அறை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர். இதனையடுத்து ரேகிங் டார்ச்சரா, ஈவ் டீசிங்கா, வார்டன் டார்ச்சரா, நிர்வாக டார்ச்சரா என்பது குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த வழக்கு சம்மந்தமான கோப்புகளை பெற்று சென்றனர். இதனால் பல்கலைகழக அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: