×

லேப்டாப் வழங்காததை கண்டித்து பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்: அயப்பாக்கத்தில் பரபரப்பு

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2016 முதல் 2018 வரை படித்த முன்னாள் மாணவர்களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை. அவர்கள் பலமுறை பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை  சந்தித்து லேப்டாப் கேட்டுள்ளனர். இருந்தபோதிலும் அவர்களுக்கு லேப்டாப் வழங்க எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 23ம் தேதி 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரும், ஆசிரியர்களும் சேர்ந்து, முன்னாள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் உயர் அதிகாரியிடம் பேசி 2 வாரத்திற்குள் லேப்டாப் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அதிகாரிகள் அளித்த காலக்கெடு முடிந்தும் லேப்டாப் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டும் சரியான பதில் இல்லை.

இதனால், ஆத்திரமநை–்த முன்னாள் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, அவர்கள் லேப்டாப் வழங்காத அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இருந்த போதிலும், போராட்டம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.  இதையடுத்து, அவர்கள் ஆவடி- அயப்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்த, மாநகர பேருந்து, தனியார் பள்ளி பேருந்து ஆகியவற்றை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லேப்டாப் வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால்  அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Condemned , providing laptop, Students,Sensationalism
× RELATED நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த...