×

தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து பாதுகாப்புத்துறை நிறுவனங்களை சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர் வேலை நிறுத்தம்: 10 கோடி உற்பத்தி பாதிப்பு

ஆவடி: பாதுகாப்புத்துறை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி தனியாருக்கு விற்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஆவடியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 41 பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் 82 ஆயிரம் தொழிலாளர்களும், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி, தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த முடிவை அமல்படுத்த வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் வர உள்ளது. இதை கண்டித்து பாதுகாப்பு துறை நிறுவனங்களை சேர்ந்த தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் அனைத்து சம்மேளனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேசன்கள் சார்பில், 41 பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு விடுத்திருந்தனர்.  

அதன்படி, நேற்று  முதல் ஆவடியில் உள்ள படைத்துறை உடைத் தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, இன்ஜின் பேக்டரி ஆகிய தொழிற்சாலைகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மேற்கண்ட தொழிற்சாலைகள் முன்பு  அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மத்திய அரசின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     இதில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஸ்ரீகுமார், சீனிவாசன், ரங்கராஜன், வேலுசுவாமி, முகம்மது மீரா உள்பட பலர் கண்டன உரையாற்றினர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் மூன்று தொழிற்சாலைகளில் உற்பத்தி தடைப்பட்டது. மேலும், மேற்கண்ட தொழிற்சாலைகளில் ஒரு நாள் மட்டும் ₹10 கோடிக்கு மேல் உற்பத்தி பாதிக்கப்படும் என தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மேற்கண்ட தொழிற்சாலைகள் முன்பு சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் ஈஸ்வரன், சாய் சரண் தேஜ்ஸ்வி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : Condemning ,federal government',security agencies, production impact
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...