×

தாம்பரம் நகராட்சியில் கட்டிடங்கள் மட்டுமின்றி பூங்கா, குளம், சாலையோரங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு வசதி: 20 பேர் கொண்ட குழு அமைப்பு

தாம்பரம்: மழைநீர் சேகரிப்பு குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம், ரிப்பன் மாளிகையில் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில், மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் வாரியம், பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது, அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டார்.அதன்பேரில் தாம்பரம் நகராட்சியில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பைய ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சியில் உள்ள அனைத்து கட்டிங்களிலும், மழைநீர் சேகரிப்பு முறையினை தவறாமல் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  ஒவ்வொரு வீடு, கட்டிடங்களிலும் நேராய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த நகராட்சியின் டி.சி.பி.  மற்றும் அனிமேட்டர்ஸ் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அதற்கான படிவங்கள் தங்களின் மேற்பார்வையாளர்களிடம் பெற்று ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 50 கட்டிடங்களில் நேராய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை சுகாதார ஆய்வாளர்கள் நேராய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஓட்டல், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெரிய தொழிற்சாலை கட்டிடங்களில் இருந்து வெளியேறும் மாசு நீரினை சுகாதார முறையில் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு விவரத்தினை நகராட்சியின் நகரமைப்பு ஆய்வர்கள் மற்றும் வருவாய் ஆய்வர் நேராய்வு செய்து அறிக்கையினை சமர்பிக்கவேண்டும். தொழிற்சாலைகள் அமைந்துள்ள மெப்ஸ் பகுதியினை முழு அளவில் ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு அமைக்க வருவாய் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும் நகராட்சி உதவி பொறியாளர்கள் அரசு கட்டிடங்கள், நகராட்சி கட்டிடங்கள் மட்டுமின்றி குளம், சாலை ஓரங்கள் மற்றும் பூங்காக்களிலும் மழைநீர் சேகரிப்பு முறை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மழைநீர் கால்வாய்களை உடனடியாக தூய்மைப்படுத்தி இணைப்பு ஏற்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு புள்ளி விவரங்களை தினசரி அறிக்கைகளை தட்டச்சர் மற்றும் புள்ளி விவர குறிப்பாளர் தினமும் கணினியில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் எனவும், இந்த பணிகளை ஒருவார காலத்திற்குள் முடிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.  இந்த பணிகளுக்காக 20 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : buildings ,municipality , Tambaram, Facility, A 20-person
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...