நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் வெற்றிகரமாக நுழைந்தது: அடுத்த மாதம் 7ம் தேதி நிலவில் இறங்குகிறது ரோவர்

பெங்களூரு: சந்திரயான் - 2 விண்கலம், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நேற்று வெற்றிகரமாக நுழைந்தது. இந்த வெற்றியால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “இஸ்ரோ” உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறது. ஒரே ராக்கெட்டில் அதிகப்படியான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது உள்ளிட்ட சாதனைகளுடன் நிலவை ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் செலுத்தியதன் மூலம்  நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.இந்தியாவின் இந்த முயற்சியை உலக நாடுகள் வியந்து பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில்  இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2, கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த முறையை போல் அன்றி இம்முறை ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று கருவிகளுடன் புறப்பட்ட  சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பிறகு படிப்படியாக நிலவின் வட்ட பாதையை நோக்கி உயர்த்தப்பட்டது. கடந்த 14ம் தேதி நிலவின் வெளிவட்டப் பாதை அருகே சென்ற சந்திரயான்-2 நேற்று வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதையொட்டி. இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன் பெங்களூருவில் நேற்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள சந்திரயான்-2 வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்துள்ளது. இது மிகவும் முக்கியமான தருணமாகும். இதற்கு பிறகுதான் எங்களின் இதய துடிப்பை அதிகரிக்கும் பல செயல்கள் காத்திருக்கின்றன. ஆர்பிட்டரின் வேகத்தை சீராககுறைப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக இருக்கிறோம்.  முதல்கட்ட முயற்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் இன்னும் நான்கு கட்டங்கள் இருக்கின்றன. வருகிற 28ம் தேதி, செப்டம்பர் 1ம் தேதி. செப்டம்பர் 2ம் தேதி என படிப்படியாக ஆர்பிட்டரின் வேகம் குறைக்கப்படும். குறிப்பாக 2ம் தேதி, ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியாக பிரிக்கப்படும்.இதை சாதாரணமாக கூறுவதை விட மிகவும் முக்கியமாக ஒட்டிப் பிறந்த இரண்டு குழந்தைகளின் மூளையில் அறுவை சிகிச்சை செய்வது போன்று மிகவும் நுட்பமானது.

இவ்வாறு தொடர்ந்து ஆர்பிட்டரின் வேகம் சீராக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு சரியாக இந்தியாவின் “சந்திரயான்-2” திட்டத்தின் முக்கிய நிகழ்வு நடக்கிறது. 1.40 மணிக்கு லேண்டர், நிலவின் தென் பகுதியில் (71 டிகிரி தெற்கு மற்றும் 25 டிகிரி கிழக்கு)  தரையிறங்கிய பிறகு மற்றொரு மிகப்பெரிய சவால் எங்களின் முன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. லேண்டர் தரையிறங்கிய பிறகு அதில் இருந்து விக்ரம் ரோவர் வெளியே வருவதற்கான ஆயத்த பணிகள் நடக்கின்றன. அடுத்த 15 நிமிடத்தில் ரோவர் தரையில் இறங்கினால், சந்திரயான்-2 முழு வெற்றி என்பதை நாம் முடிவு செய்துவிடலாம். ஏனெனில் சந்திரயான்-2 திட்டத்தின் முழு உழைப்பும் ரோவரின் செயல்பாட்டில் அடங்கியுள்ளதே இதற்கு காரணமாகும்.  லேண்டர் தரையில் கால் பதித்து நிற்கும்போது 13 மீட்டர் உயரத்திற்கு தூசி துகள் பரவலாம். அதை சமாளிப்பதற்கும் சிறப்பு யுக்தி பயன்படுத்த இருக்கிறோம். லேண்டரின் ஐந்து இன்ஜின்களில் மத்தியில் உள்ள இன்ஜினை இயக்குவதன் மூலம் அதை சரி செய்யமுடியும்.ரோவர், தரையில் கால் பதிந்த பிறகு சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் உதவியால் அது உயிர்ப்பு அடையும். நிலவில் கால் பதித்த  3 முதல் 10 நிமிடத்தில் “சோலார் பேனல்” தயாரித்த மின்சாரம் ரோவருக்கு கிடைத்த பிறகு நிலவின் தென் துருவ பகுதிகளில் 14 நாட்கள் ஆய்வு பயணத்தை மேற்கொள்கிறது. நிலவின் தரையில் இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் உள்ளிட்ட கனிமங்கள், ரசாயனப் பொருட்கள் பற்றிய தகவல்கள் ரோவரில் இணைக்கப்பட்டுள்ள கருவிகள் மூலமாக நமக்கு கிடைக்கும்.

அதே நேரம் மேற்பரப்பில் சுற்றி வரும் ஆர்பிட்டர் 365 நாட்கள் உயிர்ப்புடன் செயல்பட்டு நிலவின் புறவடிவம் சார்ந்த தகவல்களை நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும். சந்திரயான்-2 , வெற்றிகரமாக நிலவின் வட்ட பாதையில் நுழைய செய்வது சவாலாக இருந்தது. தற்போது அதை சாதித்து விட்டோம். இப்போது, லேண்டரை நிலவில் தரையிறக்குவது எங்களின் முன் இருக்கிற மிகப்பெரிய சவாலாகும்.  இதையும் நாங்கள் வெற்றிகரமாக செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இது போல் படிப்படியாக சவால்களை சந்தித்து சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பியதன் நோக்கத்தில் முழு வெற்றி பெறுவோம். இவ்வாறு டாக்டர் கே சிவன் கூறினார்.

எரிபொருள் பயன்பாடு மிகவும் முக்கியம்

ஆர்பிட்டர், தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. படிப்படியாக அதன் வேகத்தை உயர்த்தி நிலவில் தரையிறங்க செய்வதற்கு எரிபொருள் மிகவும் முக்கியமாகும். இதை முன்கூட்டியே நாங்கள் கணித்து குறிப்பிட்ட அளவில் அதை நிரப்பியுள்ளோம்.

பிரதமர் வாழ்த்து

சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், “இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்கள். சந்திரயான்-2 வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நுழைந்துள்ளது. நிலவை நோக்கிய பயணத்தில் இது ஒரு மைல் கல்” என்று கூறியுள்ளார்.

14 நாட்களுக்கு பிறகுரோவர் செயல்படுமா?

நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ள ரோவர், 14 நாட்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு பிறகு சூரிய ஒளியின் தன்மையை பொறுத்து அதன் உயிர்ப்பு தன்மை நீடிக்கலாம். அதையும் தாண்டி ரோவர் உயிர்ப்புடன் செயல்பட்டால் அது அறிவியல் சாதனைதான். ஒருவேளை அப்படி நடந்தால் அது நமது அதிர்ஷ்டமாகும் என்று கே.சிவன் கூறியுள்ளார்.

சந்திரயான்-3 எப்போது?

சந்திரயான் வரிசையில் தற்போது 2வது திட்டம் வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து மூன்றாவது திட்டமும் இஸ்ரோவிடம் இருக்கிறது. முதல் மற்றும் 2வது ஆய்வின் தகவல்கள் ஒப்பாய்வு செய்யப்பட்ட பிறகு சந்திரயான்-3 செயல்படுத்தப்படும். தற்போது அது தொடர்பாக எவ்வித திட்டமும் தயாரிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஒரு நாளில் 17 மணி நேரம்உழைத்த விஞ்ஞானிகள்

இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், ‘‘மிஷன் மங்கள் என்ற இந்தி சினிமாவை பார்க்கவில்லை. அதற்கான நேரமும் எங்களுக்கு கிடையாது. ரிது, வனிதா என்ற பெண் விஞ்ஞானிகள் தலைமையிலான குழுவினர் இத்திட்டத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளனர். சந்திரயான்-2 திட்டம் முழுமை அடைந்த பிறகு தான் எனக்கு மட்டுமின்றி, இதில் ஈடுபட்டுள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனநிறைவு ஏற்படும். அதுவரை வேறு எதைப்பற்றிய நினைப்பும் எங்களுக்கு கிடையாது. சந்திரயான்-2 வெற்றிக்கு பிறகு இத்திட்டத்திற்காக ஒரு நாளில் 17 மணி நேரம் உழைப்பை செலவிட்ட விஞ்ஞானிகள் உலகின் பார்வையில் தென்படுவார்கள். அதுவரை எங்களுக்கு வேறு எதிலும் ஈடுபாடு ஏற்படாது’’ என்றார்.

தகவல்கள் எப்போது கிடைக்கும்?

செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்குகிறது. அதன்பிறகு 15 நிமிடத்தில் ரோவர் வெளியே செல்வதற்கான கவுண்ட் டவுன் தொடங்குகிறது. 15வது நிமிடத்தில் ரோவர் நிலவில் சக்கரங்களை பதிக்கிறது. நிலவில் இறங்கிய பிறகு ரோவரில் இணைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் புகைப்படங்களை அனுப்ப தொடங்கும்.

Related Stories: