×

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒடிசா, கர்நாடகா, இமாச்சலுக்கு மத்திய அரசு 4,432 கோடி நிதி

புதுடெல்லி: இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒடிசா, கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.4,432 கோடி கூடுதல் நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.கடந்த 2018-19ம் நிதியாண்டில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில்,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் உள்துறை, வேளாண், நிதி ஆயோக்கை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஒடிசா, கர்நாடகா, இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உதவியாக ரூ.4,432 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு கூடுதல் நிதியாக ரூ.3,338.22 கோடியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவுக்கு ரூ.1029.39 கோடியும், பனிச்சரிவு மற்றும் கடும் பனிப்பொழிவால்  பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.64.46 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். இதுவரை, மாநில அரசுகள் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிய தொகையை காட்டிலும் மத்திய அரசு அதிக நிதி வழங்கி உள்ளது. கடந்த 2018-19ம்  நிதியாண்டில் மத்திய அரசு அனைத்து மாநிலத்திற்கும் ரூ.9,658 கோடி நிதி வழங்கி உள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தற்போதைய தேதி வரை 24 மாநில அரசுகள் ரூ.6,104 கோடியை ஒதுக்கி உள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

இனிமேல் கேட்டதும் கிடைக்காது நிவாரண நிதி நடைமுறையில் மாற்றம்
இயற்கை பேரிடர்கள் நடக்கும் நேரத்தில், மாநில அரசுகள் மத்திய அரசிடம் நிதியுதவி கோரிய பிறகு, மத்திய குழு நேரில் சென்று ஆய்வு நடத்தி பின்னர் நிதி உதவிக்கான தொகை நிர்ணயம் செய்யப்படும். இது, வழக்கமான நடைமுறையாக  இருந்து வருகிறது. தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், இந்த நிதியுதவியை நிர்ணயம் செய்வதற்கு மத்திய குழு 2 முறை ஆய்வு நடத்தும். இயற்கை பேரிடர் சம்பவங்கள் நடந்ததும் மத்திய குழு தாமே சென்று  முதற்கட்ட ஆய்வு நடத்தும். பின்னர், மாநில அரசுகள் நிதியுதவி கோரிய பிறகு, அங்கு நடக்கும் நிவாரண பணிகளை மத்திய குழு மீண்டும் சென்று ஆய்வு நடத்தி, இறுதியாக நிவாரண தொகை முடிவு செய்யப்படும். இதற்கான முடிவு,  நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டது.  அதோடு, தற்போது வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்களில் ஆய்வு செய்வதற்கான மத்திய குழுவும் உடனடியாக அமைக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Affected , natural disasters, Odisha, Karnataka, Himachal,central government
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி