120 முறை பயன்படுத்தலாம் வாழை நாரில் இருந்து நாப்கின்: டெல்லி ஐஐடி மாணவர்கள் சாதனை

புதுடெல்லி:  ஒருமுறை வாங்கி விட்டால் 120 முறை பயன்படுத்தக் கூடிய சானிட்டரி நாப்கினை வாழை நாரில் இருந்து தயாரித்து, டெல்லி ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த நாப்கின்கள் 2 ஆண்டுகள் வரை இருக்கும். இவற்றை 120 முறை பயன்படுத்த முடியும். ஐஐடி டெல்லி பேராசிரியர்கள் உதவியுடன் புதிய தொழில்முனை நிறுவனமான, ‘சான்பே’ இந்த நாப்கின்களை தயாரிக்கிறது. இரண்டு நாப்கின்களின்  விலை 199. இந்த குழு பிரத்யேக காப்புரிமைக்காக விண்ணப்பித்து உள்ளது.

இது குறித்து ‘சான்பே’ நிறுவனத்தின் நிர்வாகி ஆர்சிட் அகர்வால் கூறுகையில், “பெரும்பாலான சானிட்டரி நாப்கின்கள் செயற்கை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்படுகின்றன.

இவை மட்குவதற்கு 50 முதல் 60 ஆண்டுகள்  வரையாகும். இந்த சானிட்டரி நாப்கின் கழிவுகள் பொதுவாக மண்ணில் புதைக்கப்படுகிறது, திறந்தவெளியில் வீசப்படுகிறது, நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது, எரிக்கப்படுகின்றன அல்லது கழிவறைகளுக்குள் போடப்படுகிறது. நாப்கின்களை  அகற்றுவதில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நாப்கின்களை எரிப்பதால் உண்டாகும் புகையானது புற்றுநோயை ஊக்குவிக்கும் கார்சினோஜென்களை வெளியிடுகிறது. இவற்றை மண்ணில்  புதைப்பதால் குப்பைகள் அதிகரிக்கிறது. ஆனால், வாழை நாரில் தயாரிக்கப்படும் நாப்கினால், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் கிடையாது. இவற்றை 120 முறை வரை மீண்டும் பயன்படுத்தலாம்,” என்றார்.

Related Stories: