சொந்த களத்தில் முதல் வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ்?

சென்னை: சொந்த களத்தில் இன்னும் வெற்றியை சுவைக்காத தமிழ் தலைவாஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஜெய்பூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளது. மேலும் 2 போட்டிகள் சரிசமனில் (டை) முடிந்துள்ளன.  சென்னையில் இதுவரை 2 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் பெங்களூரு புல்சிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், புனேரி பல்தானுடன் கடுமையாகப் போராடி ‘டை’ செய்தது. இன்னும் வெற்றியை சுவைக்கவில்லை.இந்நிலையில் இன்று நடைபெறும் 3வது போட்டியில் ஜெய்பூர் பிங்க் பேந்தர்சுடன் மோத உள்ளது. ஜெய்பூர் இதுவரை 8 போட்டியில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அந்த அணியின் கேப்டன்  தீபக் நிவாஸ் ஹூடா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். பல நேரங்களில் அவர் குவிக்கும் புள்ளிகளே வெற்றியை வசப்படுத்த உதவி வருகின்றன.

தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரரான கேப்டன் அஜய் தாகூர் அதிகமாக ரெய்டு செல்வது அவசியம். ராகுல் சவுத்ரியும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நன்றாக விளையாடும் ஷபீர் பாப்புவுக்கு அதிக வாய்ப்பு  அளிப்பது குறித்தும் அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த போட்டியில் கலக்கிய தமிழக வீரர் அஜித் குமாருக்கு இந்த முறையும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கிடுக்கிப் பிடி வீரர்களில் மஞ்சித் சில்லர் காயம் காரணமாக போன ஆட்டத்தில் விளையாடவில்லை. ரன் சிங்,  மோகித் சில்லர் சமாளித்தால் பலன் கிடைக்கலாம். இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Tags : Tamil Tiwas ,first, home victory?
× RELATED அயோத்தியில் ராமர் கோயில்...