கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது கூலித்தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் உதவிதொகை விரைவில் கிடைக்கும்: எடப்பாடி பழனிசாமி தகவல்

சேலம்: கூலித்தொழிலாளர்களுக்கு 2ஆயிரம் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் அதிகாரிகளே பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, குறைகளை நிவர்த்தி செய்வதற்காக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நேற்று முன்தினம் (19ம் தேதி) சேலத்தில் துவங்கியது. 2ம்நாளான நேற்று  ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடந்தது. இதையொட்டி தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த முகாமை தொடங்கி வைத்து,1259 பேருக்கு ₹6.84 கோடி  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி,முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்யும் மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாக்க கூடாது என்ற  நோக்கத்தில்,நடப்பாண்டில் ₹500 கோடி மதிப்பில் 1820 ஏரிகளை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.இப்பணிகள் முழுவதும் விவசாயிகளை கொண்டே செயல்படுத்தப்படும்.

 குறிப்பாக தாழ்வான பகுதிகளில் ேதங்கி நிற்கும் மழைநீரை சேமிப்பதற்காக 1,089 கோடியில் திட்டம் கொண்டு வரப்படும். மொத்தத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாக கூடாது. அதனை சேமிப்பவர்கள் விவசாயிகளாக இருக்க  வேண்டும். அவர்கள்தான் நீரை கண்ணும் கருத்துமாக காப்பார்கள். ஏரியில் சிறிய அளவில் ஆக்கிரமிப்போ, செடி கொடிகளோ முளைத்தால் கூட,உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தலைவாசல் பகுதியில் 1700 ஏக்கரில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை சந்தை அமைக்கப்படுகிறது.இந்த சந்தையில் கால்நடை  மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் இடம் பெறும். இதில் சர்வதேச அளவிலான கலப்பின பசுக்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். கலப்பின ஆடுகள் உற்பத்திக்கும், மீன்வளர்ப்புக்கும் உரிய நடவடிக்கை  எடுக்கப்படும். கூலித்தொழிலாளர்களுக்காக அரசு அறிவித்த 2ஆயிரம் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும்.அதற்கான கணக்கெடுப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

300 ஏக்கரில் பாக்கு விவசாயம் செய்ய முதல்வர் முடிவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சியில் அபிநவம் ஏரியில் குடிமராமத்து பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்து பேசுகையில், நான் இன்னும் விவசாயம் செய்து வருகிறேன். 180 ஏக்கரில் பாக்கு  விவசாயம் செய்து வரும் நான் அதனை குத்தகைக்கு விட்டுள்ளேன். நல்ல லாபம் கிடைக்கிறது. எனது  குடும்பம் மிகப்பெரியது என்பதால் இன்னும் 300 ஏக்கரில் பாக்கு விவசாயம் செய்ய இருக்கிறேன். விவசாயிகளுக்கு ஏராளமாக உதவிகளை  செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் எல்லோருக்கும் சரிசமமாக செய்ய வேண்டும் என்பதால் என்னால் முடியவில்லை. அபிநவம் ஏரியை தூர் வாருவதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ₹1 லட்சம் வழங்குகிறேன் என்றார்.

Related Stories: