தமிழக அமைச்சர்கள் கோரிக்கை எதிரொலி தற்போதைய நிலையில் சென்னைக்கு கிருஷ்ணா நீர் இல்லை: ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டம்

திருமலை: சென்னைக்கு தற்போதைய நிலையில் கிருஷ்ணா நதி நீர் இல்லை என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.சென்னை மக்களின் தாகத்தை தீர்க்க தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் வேலுமணி,  ஜெயக்குமார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை கடந்த 9ம் தேதி சந்தித்து கோரிக்கை  விடுத்தனர். இதற்கு முதல்வர் ஜெகன்மோகனும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில் சென்னை மக்களுக்கு தண்ணீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான ஆந்திராவின் சோமசீலா, கண்டலேறு ஆகிய அணைகளில்  நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் சோமசீலா அணைக்கு சைலம் அணையில்  இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மிகவும் குறைந்த அளவாக ஒரு டிஎம்சி மட்டுமே தற்போது வந்து கொண்டுள்ளது. சோமசீலா அணையில் தற்போது 4.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே  உள்ளது.சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்துவிட சோமசீலா அணையில் குறைந்த பட்சம் 30 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும். தற்போதைய நிலவரத்தின் படி சோமசீலா அணைக்கு தினமும் ஒரு டிஎம்சி  தண்ணீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. சோமசீலா அணைக்கு தற்போது வருவது போல் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் வரத்து இருந்தால் சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விட இன்னும் 25 நாட்கள்  காத்திருக்க வேண்டும். இதனால் சென்னைக்கு தற்போதைய நிலையில் கிருஷ்ணா நதி நீர் கிடைக்க வாய்ப்பில்லை.

கண்டலேறு அணையில் சுமார் 3.5 டிஎம்சிக்கும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. கண்டலேறு அணைறயில் இருந்து சென்னைக்கு தெலுங்கு கங்கை கால்வாயில் தண்ணீர் திறந்து விட அந்த அணையில் குறைந்தபட்சம் 23 டிஎம்சி  தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும்.சோமசீலா அணையில் தண்ணீர் இருப்பு 30 டிஎம்சியாக அதிகரித்து அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு கண்டலேறு அணையில் 23 டிஎம்சியாக அதிகரிக்க 20க்கும் மேற்பட்ட நாட்கள் ஆகலாம். சைலம் அணையில் தண்ணீர் இருப்பு  அதிகம் இருந்தாலும் அங்கிருந்து சோமசீலா அணைக்கு அதிக அளவு தண்ணீரை ஒரே நேரத்தில் கொண்டுவர தேவையான பெரிய கால்வாய் இல்லாததால் இந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு காண இயலாது.மேலும் சைலம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கு அதிக அளவிலான தண்ணீரை கொண்டு வர இரண்டு அணைகளுக்கும் இடையே உள்ள கால்வாயை அகலப்படுத்த வேண்டும். இதற்கு ஆகும் செலவை ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய  இரண்டு மாநிலங்களும் வழங்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறோம் என்று தெலுங்கு கங்கை திட்ட ஆந்திர பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: