ரயில் பெட்டிகளிலிருந்து கழன்று ஓடிய இன்ஜின்: அபாய சங்கிலியை இழுத்த பயணிகளால் அசம்பாவிதம் தவிர்ப்பு

திருமலை: ஆந்திராவில் ரயில் பெட்டிகளில் இருந்து கழன்ற இன்ஜின் 5 கி.மீ. தூரத்துக்கு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனி அருகே சென்று  கொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜின் திடீரென்று பெட்டிகளில் இருந்து கழன்று சுமார் 5 கிமீ தூரம் சென்றது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பெட்டிகளை நடுவழியில் நிறுத்தினர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பெட்டிகளில் இருந்து பிரிந்து இன்ஜினை மட்டும் ஓட்டி செல்வதை அறிந்த டிரைவர், மீண்டும் இஞ்சினை பின்நோக்கி ஓட்டி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் பெட்டிகள் இஞ்சின் இல்லாமல் தனியே நின்ற  இடத்திற்கு வந்தனர்.தொடர்ந்து இன்ஜின் வந்து சேர்ந்த பின் பெட்டிகளுக்கும் ரயில் இன்ஜினுக்கும் இடையே உள்ள இணைப்பு ராடுகள் சரி செய்யப்பட்டு ரயில் இன்ஜினுடன் பெட்டிகள் இணைக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் விசாகப்பட்டினம்  நோக்கி புறப்பட்டு சென்றது. பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயில் பெட்டிகளை நிறுத்த தவறி இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

Related Stories: