354 கோடி வங்கி கடன் மோசடி ம.பி. முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகன் அதிரடி கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: வங்கியில் 354 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், மபி முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் புரியை அமலாக்கத் துறை அதிகாரிகள்  நேற்று கைது செய்தனர்.குறுந்தகடுகள், டிவிடி, மின்னணு தகவல்  சேமிப்பு உபகரணங்களை தயாரிக்கும் மோசர் பேர் இந்தியா லிமிடெட் நிறுவனம்,  கடந்த 2009ம் ஆண்டு, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவிடம் ₹354 கோடியே 51  லட்சம்  கடன் பெற்றது. அதை திருப்பி  செலுத்தாததால் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை மோசர் ேபர் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.இதன் அடிப்படையில், மோசர் பேர் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத்தின்  சகோதரி மகன் ரதுல் புரி, அவரது தந்தை தீபக் புரி, தாயாரும் கமல்நாத்தின் மூத்த  சகோதரியுமான நீட்டா  மற்றும் சஞ்சய் ஜெயின், வினீத் சர்மா ஆகியோர் மீது சிபிஐ கடந்த  17ம் தேதி முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அவர்களின் வீடுகள்,  அலுவலகங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று முன்தினம்  அமலாக்கத் துறை  அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ₹ 1,350 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பில்  ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனிடையே, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி  ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக ரதுல் புரியிடம்  அமலாக்கத்துறை விசாரணை  மேற்கொண்டது. இதனால் தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால், முன்  ஜாமீன் கோரி ரதுல் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, ‘அவர்   வெளியே இருந்தால் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை  அழிக்கவோ அல்லது தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கக் கூடும்,’ என்று  தெரிவித்தது. இதையடுத்து, ரதுல் புரிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது  வாரன்டை பிறப்பித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இந்த வழக்கில், அவரை இன்று வரை கைது செய்வதற்கு இடைக்கால  தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 14ம் தேதி உத்தரவிட்டது.இந்நிலையில்,  பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரதுல் புரியை அமலாக்கத் துறை நேற்று  அதிகாலை டெல்லியில் கைது  செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததை அடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க  அமலாக்கத்து றை  திட்டமிட்டுள்ளது. மபி  முதல்வரான கமல்நாத், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு ரதுல் புரிக்கு ஜாமீன் மறுப்பு

விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் நேற்று விசாரித்தார். அப்போது, ரதுல்புரி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மானு சிங்வி, இந்த வழக்கு விசாரணைக்கு ரதுல் முழு ஒத்துழைப்பு  வழங்குவதாகவும் அமலாக்கத்துறை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் அமான் லெகி, விசாரணையின் போது ரதுல்புரி பதில் அளிக்காமல் நழுவுவதாகவும், அளிக்கும் ஓரிரு  பதில்களும் தவறாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், ‘பதில் அளிக்காமல் இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது,’ என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து,  அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ரதுல்புரிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories: