அம்மா திட்டத்தின் பெயரை மாற்றி முதல்வர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம் என மக்களை ஏமாற்றுவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்

சென்னை: அம்மா திட்டத்தின் பெயரை முதல்வர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம் என மாற்றி மக்களை ஏமாற்றுவதா என முதல்வர் எடப்பாடிக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:வருவாய்த்துறை மூலம் அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவையை வழங்குவதற்கு முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்டது அம்மா திட்டம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2013ம்  ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் அம்மா திட்டத்தை தொடங்கி வைத்தார். அம்மா திட்டத்தின் மூலம் முதல் ஆறு மாத காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள 16,671 வருவாய் கிராமங்களுக்கும் சென்று குறைகள் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முதல்வர் குறை  தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி 73வது சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து உரையில் அறிவித்திருந்தார். ஏற்கனவே ஜெயலலிதாவால் 2013ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, மக்களிடம் நல்ல  வரவேற்பை பெற்றுள்ள அம்மா திட்டத்திற்கு மூடு விழா நடத்தியுள்ளது எடப்பாடி அரசு. அம்மா திட்டம், முதல்வர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம் என பெயர் மாற்றப்பட்டு, சேலத்தில் இந்த திட்டத்தை நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி  தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த அம்மா திட்டத்தின் பெயரை மாற்றி முதல்வர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டம் என மக்களை ஏமாற்றும் பணியை எடப்பாடி அரசு செய்துள்ளது.

Related Stories: