நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கூட ஒப்புதலை பெறவில்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை: பாஜவின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.  தமிழக காஙகிரஸ் சார்பில், மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி 75ம் ஆண்டு பிறந்த நாள் விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சிறப்பு  விருந்தினர்களாக மேலிட பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், வல்ல பிரசாத் பங்கேற்றனர். மூத்த தலைவர் குமரி அனந்தன், ஈவிகேஎஸ். இளங்கோவன், தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி, மாணிக்கம் தாகூர், ஜே.எம்.ஆரூண்,  வசந்தகுமார், ஜெயக்குமார், குஷ்பு, நாசே.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில், தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் செல்வம், கோபண்ணா, அருள் பெத்தையா, சிரஞ்சீவி, செல்வ பெருந்தகை, ராணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன்,  ரூபி மனோகரன் மற்றும் இரா.மனோகர், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, தி.நகர் ஸ்ரீராம், ரங்கபாஷ்யம், ஹசன் ஆரூண், ஊர்வசி அமிர்தராஜ், ஆலங்குளம் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

 விழாவில், கே.எஸ்.அழகிரி பேசியதாவது: சிபிஐ, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி அமைப்புகளை சிதைத்து பாஜ அரசு தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. பாஜகவை எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு பழி வாங்கப்படுகிறார்கள். கைது  செய்யப்படுகிறார்கள்.  முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கைது நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். எத்தனை அடக்குமுறையை கையாண்டாலும் அதை எதிர்த்து போராட காங்கிரஸ் தயாராக உள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று ராகுல் காந்தி  ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். ஜனநாயகத்தின் மீது மோடிக்கு நம்பிக்கையில்லை.  தமிழகத்தில் பாஜகவின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கூட குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அதிமுக அரசால் பெற முடியவில்லை. எனவே. பாஜக,  அதிமுக ஆகிய இரு கட்சிகளை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

 தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பேசியதாவது:  2014 தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் இன்று 8 எம்பிக்கள் கிடைத்துள்ளனர். அதற்கு காரணம் தமிழகத்தில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அமைத்த வலுவான கூட்டணியே காரணம். இந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். அப்போது வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார்.திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு: காஷ்மீரில் ஜனநாயகத்தை வலியுறுத்தியும், வீட்டுச்சிறை வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் திமுக எம்பிக்கள் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்  நடக்கிறது. இதில் காங்கிரஸ் எம்பிக்களும் பங்கேற்பார்கள்.

Related Stories: