டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக டெபிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: வங்கி முடிவு

மும்பை: ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக பயன்படுத்துவதைக் குறைக்கும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், டெபிட் கார்டுகள் வழுங்குவதை நிறுத்திவிட்டு, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தேசித்து வருகிறது. நாட்டில் அதிக அளவில் மக்கள் சேமிப்பு கணக்குகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்துள்ளனர். இதனால், அதிக அளவில் டெபிட் கார்டுகள் இந்த வங்கியால்தான் வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் திங்களன்று வங்கிகள் ஆண்டு மாநாடு (எப்ஐபிஏசி) நடைபெற்றது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது நடைமுறையில் உள்ள டெபிட் கார்டு முறையை ரத்து செய்துவிட்டு, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை முழுவீச்சில் அமல்படுத்த விரும்புகிறோம். அது விரைவில் சாத்தியமாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Advertising
Advertising

நாட்டில் சுமார் 90 கோடி டெபிட் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேவேளையில் 3 கோடி கிரடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எஸ்பிஐயிடம் உள்ள ‘யுனோ ஆப்’ மூலம் பண பரிவர்த்தனை செய்வதை ஊக்கப்படுத்தினால், நாட்டில் டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை குறைத்துவிடலாம் என்று ரஜினிஸ் குமார் கூறினார். யுனோ ஆப் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம் அல்லது கடைகளில் பெரிய வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கியதற்கு டெபிட் கார்டுகள் இல்லாமலே பணம் செலுத்தலாம் என்றும் குமார் தெரிவித்தார்.ஸ்டேட் பாங்க் ஏற்கனவே 68,000 யுனோ கேஷ் பாயின்ட்களை நிறுவியுள்ளது. அடுத்த 18 மாதங்களில் நாடு முழுவதும் 10 லட்சம் யுனோ கேஷ் பாயின்ட்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெபிட் கார்டு இல்லாத டிஜிட்டல் பண பரிவர்த்தனை உறுதி செய்யப்படும். யுனோ ஆப் மூலம் கிரடிட் கார்டு போன்று குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வசதியும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் யாரும் பாக்கெட்களில் டெபிட் கார்டுகள் வைத்திருக்க தேவையில்லை. எதிர்காலத்தில் டிஜிட்டல் கூப்பன்கள் தான் செயல்பாட்டில் இருக்கும். தற்போது, கியூஆர் கோடு மூலம் பண பரிவர்த்தனை செய்வதும் செலவு மிகக் குறைந்த பரிவர்த்தனையாக உள்ளது என்றும் ரஜினிஷ் குமார் குறிப்பிட்டார்.

* டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் எஸ்பிஐ.யின் ‘யுனோ ஆப்’  முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் டெபிட் கார்டு இல்லாத நாடாக இந்தியா மாறுவதற்கு உதவுவோம் என்று ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

* யுனோ ஆப்’ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் அல்லது கடைகளில் பொருள்கள் வாங்கியதற்கு பணம் செலுத்த டெபிட் கார்டு பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம் என்றும் குமார் கூறினார்.

Related Stories: