இட ஒதுக்கீடு மீதான விவாதம் கண் துடைப்பு சமூக நீதியை ஒழிப்பதே ஆர்எஸ்எஸ் குறிக்கோள்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மக்களுக்கு ஆதரவான சட்டங்களின் குரல்வளையை நெறிக்கிறது. சமூக நீதியை ஒழிப்பதையே ஆர்எஸ்எஸ்.சும், பாஜ.வும் குறிக்கோளாக கொண்டுள்ளன, என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் போட்டி தேர்வுகள் எழுதுபவர்களுக்கான கியான் உத்சவ் பயிற்சி வகுப்புகள் டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இடையே சுமூகமான சூழலில் விவாதம் நடத்த வேண்டும், என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பும் இது தேவையற்றது என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கை மிக உயர்வானது. அதே நேரம், அதனுடைய உள்நோக்கம் மிகவும் ஆபத்தானது. மோடி தலைமையிலான பாஜ அரசு, மக்கள் ஆதரவு சட்டங்களின் குரல்வளையை நெறித்து வரும் வேளையில், இடஒதுக்கீடு தொடர்பாக அதனை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இடையே சுமூகமான சூழலில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்  கூறுகிறது. இட ஒதுக்கீடு மீதான விவாதம் என்பது வெறும் கண்துடைப்பு. சமூக நீதியை ஒழிப்பதே ஆர்எஸ்எஸ்-பாஜ குறிக்கோள், என கூறியுள்ளார்.

‘விவாதம் தேவையில்லை’

இட ஒதுக்கீடு விவாதம் தொடர்பாக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், ``இட ஒதுக்கீடு பற்றி விவாதம் நடத்த தேவையில்லை. உயர்ந்த சாதியை சேர்ந்த ஏழைகளும் இதனால் பயனடைவார்கள். எனவே, இது தற்போது முடிவுக்கு வராது. எதிர்க்கட்சிகள் சர்ச்சையை பெரிதாக்க நினைக்கின்றன. ஆனால், அவர்களின் பொய்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. இட ஒதுக்கீடு என்பது மக்களின் அரசியலமைப்பு உரிமை. இதை மாற்ற முடியாது என்று பிரதமர் மோடியும் பலமுறை பதில் அளித்துள்ளார், என்றார்.

Related Stories: