ஆட்டோமொபைல் நிறுவனங்களின் அவலம் முதலில் தற்காலிக தொழிலாளர்களுக்கு கல்தா: வாழ்வாதாரத்தில் பெரும் நெருக்கடி அபாயம்

புதுடெல்லி: முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆட்டோமொபைல் தொழில் தற்போது  பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. வாகனங்கள் விற்பனை குறைந்ததால்  உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால்  தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முதலில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும்  சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை  தொடர்ந்து நிரந்தர அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களும் வேலை இழக்கும்  நிலை ஏற்படலாம் என்ற அச்சம் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி  அருகே குர்கானில் மாருதி நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி தொழிற்சாலை  அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அருகில் உள்ள  முல்ஹெரா கிராமத்தில் தங்கியுள்ளனர். பிற்பகலில் தொழிற்சாலையில் இருந்து  சீருடை அணிந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வெளியே வந்தனர். அப்போது, அவர்கள்  பேசிக் கொண்டது, “ஆட்டோமொபைல் தொழில் பெரும் நெருக்கடியை சந்தித்து  வருகிறது. வாகனங்கள் விற்பனை குறைந்ததால் உற்பத்தியை குறைக்க வேண்டிய  நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதனால் தொழிலாளர்களுக்கு வேலைகொடுக்க முடியாமல்  அவர்கலை வீட்டுக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக  உற்பத்தியை குறைக்க தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே  நிலை தொடர்ந்தால் தொழிலாளர்களுக்கு வேைலயில்லாமல் ஊதியம் கொடுக்க  தொழிற்சாலை நிர்வாகங்கள் முன்வராது. அதனால், தற்காலிக தொழிலாளர்களை பணியில்  இருந்து நிறுத்தும், அதன் பின்னர் நிரந்தர பணியில் உள்ள  தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்”  என்று கவலையை பகிர்ந்து  கொண்டனர். மாருதி நிறுவனம் தனது தொழிற்சாலையில் உற்பத்தி  நிறுத்தத்தை அறிவித்து தொழிலாளர்களை பணியில் இருந்து தற்காலிகமாக  நிறுத்தியுள்ளது. இப்படி வேலையிழந்த தற்காலிக தொழிலாளி ஒருவர் கூறுகையில்,  வேலையில்லாமல் இங்கு இருக்க முடியாது. வீட்டு வாடகை கூட கொடுக்க  முடியவில்லை. தொழிற்சாலையில் கேட்டால், நிலைமை சீரடைந்தால், மீண்டும்  வலையில் சேர்த்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்.

ஆனால், அதுவரையில் வேலை  இல்லாததால் நான், உ.பி.யில் உள்ள எனது சொந்த ஊருக்குச் செல்கிறேன். வேறு வேலையைத்தான் தேட வேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கூறினார். இதே  நிலையில்தான் ஏராளமான தொழிலாளர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். செக்யூரிட்டி  கார்டு உள்பட பல்வேறு மாற்று வேலைகளை தேடி தொழிலாளர்கள் அலைவது பரிதாபமாக  உள்ளது என்றும் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். “தொழிற்சாலைகள்  என்பது வேலைவாய்ப்பை அளிக்கும் அமைப்புகளாகும். நமது நாட்டில் வேளாண்மை  பிரதானமாக இருந்துது, பின்னர் உற்பத்தி துறை முக்கியத்துவம் பெற்றது. அதன்  பின்னர் சேவைகள் துறை வளர்ச்சி பெற்றது. தொழில்துறையின் வளர்ச்சியில்  இந்தியாவின் அனுபவம் என்பது வித்தியாசமானது. சேவைகள் துறையைத்தான்  பிரதானமாக சார்ந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்க  முடியவில்லை. தொழிற்சாலைகள் தான் உண்மையில் கல்வி தகுதி குறைந்த  தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

இதன்  தொடர்ச்சியாக அடிப்படை கட்டமைப்பு மற்றும் சேவை துறைகளிலும் பணிகளை  உருவாக்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறது.. தற்போது தொழிற்சாலைகளில்  நெருக்கடியில் சிக்கியுள்ளதால் வேலையிழப்பு என்பது சமுதாயத்தில் பெரும்  நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஐசிஆர்ஐஇஆர் நிறுவனத்தின் பொருளாதார  நிபுணர் ராதிகா கபூர் தெரிவித்தார்.

* வாகனங்கள் விற்பனை குறைந்ததால், ஆட்டோமொபைல் தொழில் பெரும் நெருக்கடியை  சந்தித்து நலிவடைந்து வருகிறது. இதனால், முதலில் பாதிக்கப்படுவது தற்காலிக  ஊழியர்கள்தான். சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.

* இந்தியா, இதுபோன்ற நெருக்கடியை சந்தித்துள்ளது  தொழில் துறையின் அனுபவத்தில் இருந்து மாறுபட்டுள்ளது.

* மாற்று வேலை தேடி அலையும் பாிதாபம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: