×

சீரமைப்பு பணிகள் துவங்கின இரண்டாம் சீசனுக்கு தயாராகும் ஊட்டி ரோஜா பூங்கா

ஊட்டி:  இரண்டாம் சீசன் நெருங்கி வரும் நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.     ஊட்டி ரோஜா பூங்காவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. ஆண்டு தோறும் மே மாதம் கோடை சீசனின் போது ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது.  இதற்காக, பிப்ரவரி மாதம் செடிகள் கவாத்து செய்யப்பட்டு, மே மாதம் புதிய செடிகளில் பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.  ஆனால் ஊட்டியில் துவங்கும் 2வது சீசனுக்கு ரோஜா செடிகள் கவாத்து செய்யப்படுவதில்லை. அதேபோல் கண்காட்சியும் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் வகையில் செடிகளுக்கு உரமிட்டு தயார் செய்யப்படும்.  மேலும், அங்குள்ள புல் மைதானங்கள் சீரமைக்கப்படும்.

ரோஜா செடிகளில் 2ம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அனைத்து செடிகளிலும் பூக்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இதற்காக, தற்போது பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில், பூங்காவில் உரமிடுவது, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது மற்றும் புல் மைதானங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு மேல் செடிகளில் பூக்கள் பூக்க வாய்ப்புள்ளதாக ரோஜா பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Renovation works, second season, Ooty rose garden
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...