புதுவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடிதம் கொடுத்துள்ளனர். புதுச்சேரியில் திமுக ஆதரவுடன்  காங்கிரஸ் அரசு  3 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.  இதற்கிடையே எதிர்க்கட்சிகள் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக தகவல் பரவியது. இந்நிலையில்,  எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில்  என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுகுமாறன், டிபிஆர் செல்வம், ஜெயபால்,  அதிமுக அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று மதியம் சபாநாயகர் அறைக்கு சென்றனர்.அங்கு சட்டசபை செயலர்  வின்சென்ட்ராயர், சபாநாயகரின் தனி செயலர் சந்திரமோகன் ஆகியோரை சந்தித்து  சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை கொடுத்தனர்.

தொடர்ந்து ரங்கசாமி கூறுகையில்,  நடுநிலையாக செயல்பட வேண்டிய சபாநாயகர், கட்சி கூட்டத்தில் கலந்து   கொண்டிருக்கிறார். அவர் செயல்பாடு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை கொடுத்துள்ளோம் என்றார்.எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்?: என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால், அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் ஆகியோர் காங்கிரசின் பெண் எம்எல்ஏ விஜயவேணியை தங்கள் கட்சிக்கு இழுக்க பேரம் பேசியதாக சபாநாயகரிடம் புகார்  கொடுக்கப்பட்டது. இதற்கான உரையாடல் அடங்கிய ஆடியோ சிடி ஆதாரத்துக்காக இணைக்கப்பட்டுள்ளது. இந்த புகார்  பரிசீலனையில் இருக்கிறது. இதையடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: