×

பேனர் வைப்பதில் கோஷ்டி மோதல் விழுப்புரத்தில் நடுரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கைகலப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. புதிய மாவட்ட தலைவராக ஆர்டிவி சீனுவாசக்குமார் நியமிக்கப்பட்ட பின்னர், பழைய மாவட்டத்தலைவர் குலாம்மொய்தீன் தலைமையில் ஓர் அணியாகவும், மாவட்டத்தலைவர் சீனுவாசக்குமார் தலைமையில் மற்றொரு அணியாகவும் காங்கிரசார் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்று ராஜிவ்காந்தி பிறந்தநாளையொட்டி சீனுவாசக்குமார், குலாம் அணியினர் தனித்தனியாக மாலை அணிவிக்க வந்தனர். அங்கு ஏற்கனவே சீனுவாசக்குமார் தரப்பினர் பேனர்களை கட்டி வைத்திருந்தனர். அதன்மீது குலாம் அணி சார்பில் மற்றொரு பேனரை கட்டினர். அதை சீனுவாசக்குமார் அணியினர் அவிழ்த்துவிட்டு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த குலாம் அணியினர் ராஜிவ் சிலை முன்பு நின்று சீனுவாசகுமார் அணியினரை வரவிடாமல் தடுப்பு ஏற்படுத்தினர். இதனால் கோஷ்டிபிரச்னை அதிகரித்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

எனினும் ஒருவழியாக நிகழ்ச்சிகள் முடிவடைந்து இரு அணியினரும் கலைந்து செல்லும்போது, எதிர் அணி நிர்வாகியான சிறுவை ராமமூர்த்தியிடம் எதற்காக நாங்கள் கட்டிய பேனரை இறக்கினீர்கள் என்று குலாம் கேட்டார். அதற்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் கட்டிய பேனர்தான் இருக்க வேண்டும் என்று ராமமூர்த்தி பதில் கூறவே இரு கோஷ்டியினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது முன்னாள் மாவட்டத்தலைவர் குலாமிற்கும், சீனுவாசக்குமார் அணியினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து குலாம் தரப்பு மீது நகர காவல்நிலையத்தில் மாவட்ட தலைவர் சீனுவாசக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Banner, Congressmen
× RELATED பெரியபட்டணத்தில் தென்னை மட்டையை...