பெரியாறு அணைப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு: கேரள தலைமை செயலர், டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: பெரியாறு அணைப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், கேரள தலைமை செயலர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, அய்யர்பங்களாவைச் சேர்ந்த பொறியாளர் கனகசபாபதி. கடந்த 2012ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியாறு அணை உடைந்தால் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து என்ற தவறான தகவல் கேரளாவைச் சேர்ந்தவர்களால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. பா.ஜ.வை சேர்ந்தவர்கள் பொக்லைன் மற்றும் ஆயுதங்களுடன் அணைப்பகுதிக்குள் நுழைந்த சேதப்படுத்த முயற்சித்துள்ளனர். தேக்கடியிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சிலர் பேபி அணையை சேதப்படுத்த முயற்சித்தனர்.

பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கிடைக்காவிட்டால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கும். இந்தப்பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருமாநிலங்கள் இடையே வன்முறை உருவாகக்கூடும். பலர் தங்களது பிழைப்புக்காக இடம் விட்டு இடம் பெயரும் சூழல் உருவாகும்.  எனவே, கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அணைப்பகுதிக்கு செல்வதை முறைப்படுத்த வேண்டும். அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல் மூத்த பொறியாளர் விஜயகுமார் மற்றும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,அணைப்பகுதியில் கேரள போலீசாரின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு சிஆர்பிஎப் அல்லது சிஐஎஸ்எப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  பின்னர், தமிழக அரசு தரப்பில், பெரியாறு அணை பிரச்னை சம்பந்தமான பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் உள்ளது. எனவே, இங்கு தனியாக விசாரிக்க வேண்டியதில்லை என கூறப்பட்டது.  அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் லஜபதிராய், ‘‘பெரியாறு அணைப்பகுதியில் பார்க்கிங் அமைப்பது மற்றும் கேரள அரசின் ஆக்கிரமிப்பு தொடர்பாகவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.   எங்கள் தரப்பு வாதம், அணைப்பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்த தனியார்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை எதிர்த்தும் தான். உச்சநீதிமன்றத்திலுள்ள வழக்கு வேறு. எங்களது வழக்கு வேறு. இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது. எனவே, எங்கள் தரப்பு மனுவை இங்கேயே விசாரிக்கலாம்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், கேரள அரசின் தலைமைச் செயலர் மற்றும் கேரள டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை செப்.11க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: