×

சாலையை ஒப்படைப்பதில் காலதாமதம் வேலூர் விமான நிலைய பணியை முடிப்பதில் சிக்கல்: போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை செயலர்களுக்கு கடிதம்

வேலூர்: சாலையை ஒப்படைப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் வேலூர் விமான நிலைய பணியை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைத்துறை செயலர்களுக்கு மீண்டும் கடிதம் அனுப்புகின்றனர். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையம் வசம் உள்ள 52 ஏக்கர் நிலத்துடன், விரிவாக்கப் பணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 68 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தி ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் நகரங்களுக்கு சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 800 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அதேபோல் பயணிகள் ஓய்வறை, உணவகம், பாதுகாப்பு, சோதனை முனையம் உள்ளிட்டவை அடங்கிய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டும் பணியும் முடியும் நிலையில் உள்ளது. விமானங்கள் வந்து இறங்கி செல்ல வசதியாக நடமாடும் சிக்னல் மையம் தயார் நிலையில் உள்ளது.

இதற்கிடையில் அப்துல்லாபுரத்தில் இருந்து தார்வழி வரை விமான நிலையம் நடுவே செல்லும்  சாலையை விமான நிலைய ஆணையத்திடம் முழுமையாக ஒப்படைக்காததால் அந்த பகுதியில் பணிகள் முடங்கி உள்ளது. இந்த சாலைக்கு பதிலாக விமான நிலையத்தை சுற்றி வரும் வகையில் புதிய சாலை அமைக்க 1.15 கோடி தேவைப்படுகிறது. அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், விமானநிலையம் வழியாக செல்லும் சாலையை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைப்பதில் தொடர் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி பணிகளை இன்னும் 2 மாதங்களில் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ பார்த்தீபனிடம் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி மாயப்பன் நேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வேலூர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது விமான நிலையத்துக்கு சாலையை ஒப்படைப்பதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், அவற்றை களைந்து சாலையை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து விமான போக்குவரத்து உயரதிகாரிகள் கூறுகையில், வேலூர் விமான நிலையத்திற்கான அனைத்து பணிகளும் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இன்னும் ஒரு சில பணிகள் மட்டுமே உள்ளது. இதில் குறிப்பாக அப்துல்லாபுரத்தில் இருந்து தார்வழிக்கு செல்லும் சாலையை ஒப்படைப்பது குறித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்தும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சாலையை ஒப்படைக்க முறையான அறிவிப்பு வரவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி சாலையை ஒப்படைக்க கோரி மீண்டும் போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலையை ஒப்படைத்தால் 2 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும். அதன்பிறகு விமான போக்குவரத்து துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்னர் 441 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தை கூடுதலாக விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கும் என்றனர்.


Tags : Vellore Airport Works, Transport, Highways
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...