தேர்தல் பணி வாடகை பாக்கி சீர்காழி தாசில்தார் ஆபீசில் டிரைவர்கள் திடீர் தர்ணா

சீர்காழி: தேர்தலில் பறக்கும்படை குழுவுக்கு பயன்படுத்திய  வாகனங்களுக்கு வாடகை தொகை நிலுவையில் இருப்பதால்  வாகன டிரைவர்கள் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மக்களவை தேர்தலையொட்டி சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளுக்கு சென்று கண்காணிக்கவும், பறக்கும் படை குழுவினர்களுக்காக வாடகை வாகனங்கள் சீர்காழி தாசில்தார் அலுவலகம் மூலம் ஒப்பந்தம் பேசப்பட்டு இயக்கப்பட்டது. தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆகியும் சுமார் 7 வாகனங்களுக்கு வாகன வாடகை தொகை தரப்படவில்லை. ஒரு வாகனத்திற்கு ₹60 ஆயிரம் வரை வாடகை தரப்பட வேண்டும் என டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலுவை தொகையை உடனே பெற்றுத்தர வலியுறுத்தி மாவட்ட கலெக்டர், மயிலாடுதுறை ஆர்டிஓ, சீர்காழி தாசில்தார் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம்.

இதனால் நிலுவை தொகை கேட்டு 7 வாகன டிரைவர்கள் சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அங்கு தாசில்தார் இல்லாததால் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்கள் கண்டன முழக்கமிட்டுவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: