8 வழிச்சாலையால் பாதிப்பு குறித்து மனுகொடுக்க முதல்வரை சந்திக்க வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி அலைக்கழித்த போலீசார்: மறியல், வாக்குவாதம், தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

சேலம்: சேலத்தில் 8வழிச்சாலை குறித்து முதல்வரிடம் முறையிட வந்த விவசாயிகளை போலீசார், 15கிலோ மீட்டர் தூரம் அலைக்கழித்தனர். இதற்கு எதிர்ப்பு ெதரிவித்து பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  சேலம் மாவட்டம்  வாழப்பாடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை,  8வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பினர் சந்திக்க முடிவு செய்தனர். இதற்காக அயோத்தியாப்பட்டணம், வலசையூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நாராயணன், சிவகாமி, கவிதா, கந்தசாமி உள்பட 20க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை  வாழப்பாடிக்கு புறப்பட்டனர். மின்னாம்பள்ளி அருகே வந்தவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடையை மீறி, வாகனத்தில் வாழப்பாடிக்கு புறப்பட்டனர். ஆனால், வாழப்பாடி  பஸ்நிலையம் அருகே அவர்கள் வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். ‘நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு, முதல்வர் பயணியர் மாளிகைக்கு வருவார். அங்கு நீங்கள் முதல்வரை சந்திக்கலாம்’ என்று கூறி அழைத்துச் சென்றனர்.

ஆனால் பயணியர் மாளிகைக்கு முதல்வர் வரவில்லை. நேரடியாக சிறப்பு முகாம் நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார்.  இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், அங்கிருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றனர். அப்போது விவசாயிகளை சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைத்த போலீசார், முதல்வர் இந்த வழியாக காரில் வரும்போது மனு கொடுக்க ஏற்பாடு ெசய்கிறோம் என்று கூறி, தடுத்து நிறுத்தி வைத்தனர். ஆனால் விழாவை முடித்தபின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கார், எங்கும் நிற்காமல் மின்னல் ேவகத்தில் சென்றது. வழியில் விவசாயிகள் நின்றிருந்ததை பார்க்காமல் அவர் சென்று விட்டார். விவசாயிகள் காத்திருக்கும் தகவலை போலீசார் தெரிவிக்கவும் இல்லை.

 இது ஒரு புறமிருக்க,போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து கூச்சலிட்டபடியே முண்டியடித்து வெளியே வந்த 2 பெண் விவசாயிகள், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே போலிசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த இடம் முழுவதும் போர்க்களம் போல் மாறியது. சுமார் ஒரு மணிநேரம் போராட்டம் நீடித்த நிலையில், இனி எந்த பயனும் இல்லை என்று கூறியபடியே கண்ணீர் சிந்தியவாறு விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

முதல்வரை சந்திக்க விடக்கூடாது என்று திட்டமிட்டே, மின்னாம்பள்ளியில் இருந்து வாழப்பாடி வரை 15 கிலோ மீட்டர் தூரம்  போலீசார் எங்களை அலைக்கழித்தனர். எங்களையும், எங்களது கோரிக்கையையும் ஒரு பொருட்டாகவே முதல்வர் எடுத்துக்கொள்ளாதது பெரும் வேதனைக்குரியது. இதுபற்றி முதல்வர் மீது, நீதிமன்றத்தில் புகார் தெரிவிப்போம். எங்களது உடலில் உயிர் இருக்கும் வரை, 8 வழிச்சாலையை எதிர்த்து போராடி,  எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவோம்.  இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Related Stories: