நாகர்கோவிலில் பன்றிகள் பிடிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

நாகர்கோவில்: நாகர்கோவில் பஸ்நிலையம் மற்றும் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், பாலமோர் சாலை, நாகராஜா கோயில் ரத வீதிகள், எஸ்பி அலுவலகம் சாலை ஆகிய இடங்களில் மாடுகளும், வடசேரி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பன்றிகளும் வலம் வந்தன. இதனால் பயணிகளும், சாலைகளில் செல்வோரும் கடும் அவதி அடைந்து வந்தனர். சில நேரங்களில் மாடுகள் விபத்தில் சிக்கி உயிர் இழந்த சம்பவங்களும் நடைபெற்றன.

இதுபற்றி  தொடர்ந்து தமிழ்முரசுவில் செய்திகள் வந்ததை அடுத்து, மாடுகள் பவுண்டில் அடைத்து அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், கடும் போராட்டத்திற்கு பின்னர் சாலைகளில் திரிந்த மாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. இதுபோல் வடசேரி பஸ் நிலையம், மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் பன்றிகள் சுற்றி திரிந்து வருகின்றன. அடிக்கடி மாநராட்சி அதிகாரிகள் இந்த பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டாலும், சாலைகளில் தொடர்ச்சியாக பன்றிகளை சுற்ற விட்டு வருகின்றனர். கடந்த மாதம் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கின்சால் உத்தரவின் பேரில் சாலைகளில் சுற்றி திரிந்த பன்றிகள் பிடித்து செல்லப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பன்றிகள் சுற்றி திரிந்து வருகின்றன. இதனையடுத்து, இன்று அதிகாலை மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில், வடசேரி பஸ் நிலையம், புதுக்குடியிருப்பு, டிஸ்டிலரி சாலை போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்த 12 பன்றிகளை பிடித்தனர். தொடர்ந்து கோட்டாறு பகுதியில் சுற்றிய பன்றிகளையும் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: