29ம் தேதி தேரோட்டம் திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி  கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா இன்று (20ம் தேதி) தொடங்கி ஆக. 31ம் தேதி வரை 12 நாட்கள்  நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 4.15 மணிக்கு கோயிலிருந்து பல்லக்கில் கொடிப்பட்டம் எழுந்தருளி 9 சந்தி வழியாக மீண்டும் திருக்கோயில் வந்து சேர்ந்தது. பின்னர் கொடிமரத்தடியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க 5.20 மணிக்கு கற்பகவீரக்குமார்பட்டர் கொடியேற்றினார்.

தொடர்ந்து கொடிமரத்திற்கு பல வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து 6.20 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. முக்கிய திருவிழாவான 24ம் தேதி 5ம் திருவிழாவில் இரவு 7.30 மணிக்கு  சிவன்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 26ம் தேதி 7ம்  திருவிழா அன்று காலை 5.30 மணிக்குள் சுவாமி ஆறுமுகநயினார் உருகு சட்ட  சேவையும், 9 மணிக்கு மேல் சண்முக விலாசத்திலிருந்து சுவாமி வெற்றிவேர்  சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி திருவீதி உலா வரும்  வைபவம் நடக்கிறது.

8ம் திருவிழாவான 27ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி  வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு சுவாமி  ஆறுமுகநயினார் பச்சை சாத்தியிலும் எழுந்தருளுகிறார். 29ம் தேதி 10ம்  திருவிழா அன்று காலை 6 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வருகின்றனர்.

Related Stories: