திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு: பக்தர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்த முடிவு

திருமலை: திருப்பதி தேவஸ்தான வனப்பகுதியில் பொருத்திய சிசிடிவி கேமராவில் வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதி சேஷாச்சலம் மலைத்தொடர் 82,500 எக்டர் பரப்பளவில் உள்ளது. இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக 2,700 எக்டர் வனப்பகுதி உள்ளது. இந்த  வனப்பகுதியை பாதுகாப்பதோடு பல அரிய வகை மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தேவஸ்தான வனத்துறை சார்பில் வன விலங்குகளை அடையாளம் காணும் விதம் விதமாக சந்தனமர வனம்,  குமாரதாரா, பசுப்புதாரா  அணைக்கு செல்லும் சாலை,  தர்மகிரி, பாபவிநாசம் மற்றும் சேஷாச்சல மலை தொடரில் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா  வைக்கப்பட்டது. இந்த கேமரா முன் விலங்குகள் சென்றால் அதனை படம் பிடிக்கும் விதமாக சென்சார் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சென்சார் மூலமாக அதிக அளவு வன உயிரினங்கள் இங்கு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் புனுகு பூனை, காட்டு நாய், கரடி,  சிறுத்தை, நரி, கீரிபிள்ளை உட்பட பல்வேறு அரிய வகை வன உயிரினங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பக்தர்களை கரடி மற்றும் சிறுத்தை தாக்குதல் நடத்திய நிலையில் இதுகுறித்து பக்தர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக அந்தந்த பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்க ஏற்பாடு செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளை காப்பாற்றும் விதமாக அவற்றிக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர் வனப்பகுதியில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தேவஸ்தான வன அலுவலர் பணி குமார் தெரிவித்தார்.

Related Stories: