×

பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு: கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு: பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசின் துணையுடன் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. கேரள அரசியல் கட்சியினர் தேவையில்லாமல் மக்களிடம் போராட்டத்தை  தூண்டுகின்றனர். எனவே, தமிழக பொதுப்பணித்துறையினருக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். கேரள போலீசாரின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு சிஆர்பிஎப் அல்லது சிஐஎஸ்எப் படையினரை  பாதுகாப்பில் ஈடுபடுத்தவும், அணை நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், மதுரை, அய்யர்பங்களாவை சேர்ந்த பொறியாளர் கனகசபாபதி. கடந்த 2012ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கேரளாவைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அணைப்பகுதிக்கு  செல்வதை முறைப்படுத்த வேண்டும். அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் கடந்த 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதிகள், ‘‘முல்லை பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் உள்ளன. எனவே, மனுதாரர்கள் அந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளலாமே’’ என்றனர்.  அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, ‘‘பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.  இதையடுத்து மனுக்களின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதிகள், தீர்ப்பை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனை தொடர்ந்து இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கினைத் தாக்கல் செய்த விஜயகுமார் இறந்துவிட்ட காரணத்தால், தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில முன்னாள் தலைவரான ரெங்கன் என்பவரை இந்த வழக்கில் சேர்க்க அனுமதி கோரினார். அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அரசுத்தரப்பில் இதே போன்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், உச்சநீதிமன்றத்தில் 152 அடிக்கு மேலுள்ள, கேரள அரசின் வரம்பிற்குட்பட்ட பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளது.

இந்த வழக்கு தமிழக அரசின் வரம்பிற்குட்பட்ட 136 அடி முதல் 152 அடி வரையிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரும் வழக்கு. மத்திய அரசுத்தரப்பில் 2006 நவம்பரில் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அளிக்கப்பட்ட ரகசிய அறிக்கையிலேயே ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Periyar Dam, Occupation, Government of Kerala, Notices, Icort Branch
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...