×

மத்தியபிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய இருவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

போபால்: மத்தியபிரதேசத்தில் அணையின் மதகு அருகே மீன்பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் போபாலில் உள்ள கேர்வா அணையில் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்க அங்கிருந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. இதனை அறியாது சரோட்டிபுரா கிராமத்தை சேர்ந்த சிவா மற்றும் காஞ்சி ஆகியோர் மதகு அருகே உள்ள நீர் தேக்கத்தில் பாறையில் நின்றபடி மீன் பிடித்தனர். அப்போது திடீரென மூன்று மதகுகள் வழியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் அவர்கள் நின்ற பாறையை சுற்றிலும் வெள்ளக்காடாக மாறியது.

இதை அடுத்து இருவரும் அச்சத்தில் கூச்சலிடவே அவர்களை பார்த்த கிராம மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து அவர்கள் மூலம் தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்குவந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் உள்ள ஏணியை அவர்கள் நின்ற இடத்தின் குறுக்கே பாலமாக அமைத்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் மழைக்காலம் முடியும் வரை யாரும் நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். உயிரை பணயம் வைத்து இருவரையும் மீட்ட தீயணைப்புத் துறையினரின் இந்த முயற்சியை பலரும் வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.


Tags : Midwest, Flood, Two, Fire Department, Rescue
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்