×

பப்புக்குள் நுழையலாமா?

நன்றி குங்குமம்

எத்தனை மணிக்கு பப்புக்குள் நுழைந்தால் கலக்கலாக இருக்கும்?

இரவு பதினோரு மணிக்கு மேல்தான் பப் களை கட்டும் என்றாலும், பத்து மணிக்கு நுழைந்து விடுவது பதம் பார்க்க உதவும்!பப்களில் ஹேப்பி ஹவர்ஸ் உண்டு. மாலை ஆறு மணி வரை அல்லது 8 மணி வரை ஹேப்பி ஹவர்ஸ் என்பார்கள். பாதி விலையில் அல்லது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விதவிதமான ஆஃபர்ஸ் இருக்கும்.

ஆனால், இந்த நேரத்தில் கூட்டம் இருக்காது என்பதால் பழரசம் அருந்தி தொப்பை போட்டவர்கள் இந்த ஹேப்பி ஹவர்ஸில் செல்ல மாட்டார்கள்.
இந்த சீனியர் பப் சிட்டிஸன் கோஷ்டிகள் மாலை முதல் சீப் ரேட்டில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி ஏத்திக்கொண்டு இருக்கும். டாஸ்மாக் மூடியதும் பப்பை நோக்கி படையெடுப்பார்கள். இளம் பெண்கள், பாய் ஃபிரண்டுகளை விட்டு சரக்கு வாங்கி வரச்சொல்லி அறையிலேயே சரக்கை கவுத்துக்கொண்டு பத்து மணிக்கு மேல் மேக் அப் போட ஆரம்பிப்பார்கள்!

இவர்கள் அனைவரும் பப்பில் கடமைக்கு ஒன்று அல்லது இரண்டு ரவுண்ட் மட்டும் அடிப்பவர்கள். முழு போதையும் சென்னை பப்பில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் மக்கள் சேவை செய்யும் அரசியலிலோ அல்லது சினிமாவிலோ இருக்க வேண்டும்! பப்புக்கென்று பிரத்யேகமாக சில உடைகள் உள்ளன. ஆனால், சென்னை பப்பில் அதைப்போல பெரும்பாலும் பார்க்க முடியாது. இன்னும் காலர் வைத்த டி ஷர்ட்டையும் பிவிசி பைப் ஃபிட்டிங் ஜீன்ஸையும் போட்டுக்கொண்டு ஆண்கள் திரிய, பெண்கள் பற்களுக்கு எல்லாம் லிப்ஸ்டிக் ஈஷிக் கொண்டு அதே ஜீன்ஸ் அல்லது அதிகபட்சம் சிங்கிள் டிரஸ்ஸில் வருவார்கள்.

வழக்கமாகப் போடும் பர்ஃப்யூம் அளவை விட நான்கு மடங்கு அதிகம் போட்டுக்கொண்டு ஒரு பெண் கிளம்பினால் அவள் பப்புக்கு போகிறாள் என்று அர்த்தம்! பப்புக்கு போட்டுச்செல்லும் பெண்கள் உடைகள் இப்போது பிளாட்ஃபார்மிலேயே 195 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், அதை வாங்கிப் போட்டுக்கொள்ளும் பெண்கள் ரங்கநாதன் தெருவிலும் ஆஞ்சநேயர் கோயிலிலும் வலம் வந்து கொண்டிருப்பது தனிக் கதை. சென்னை பப்களில் பெண்களுக்கு உடையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

உள்பாவாடை போட்டு மடித்துக் கட்டிக்கொண்டு ஷிம்மி போட்டுக்கொண்டு வந்தாலும் அனுமதிப்பார்கள். உடை இல்லாமல் வரக்கூடாது என்ற விதிகூட கண்களில் பட்டதில்லை. ஆண்களுக்கு கட்டுப்பாடு உண்டு. ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு வரக்கூடாது. வேட்டி கட்டிக்கொண்டு வரக்கூடாது. முண்டா பனியன், கட்டம் போட்ட அண்டர்வேர் எல்லாம் போட்டுக்கொண்டு வரக்கூடாது. முக்கியமாக ஷூ போட்டுக்கொண்டு வரவேண்டும். 5000 ரூபாய் செருப்பு போட்டுக்கொண்டு போனாலும் அனுமதி கிடையாது. 99 ரூபாய் ஷூ போட்டுக்கொண்டு போனால் அனுமதி உண்டு!

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுபவன் போல ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பது எனக்கே தெரிகிறது! சாரி, அனைத்துத் தரவுகளையும் கொடுத்துவிட வேண்டும் என்பதால்தான் இந்த பில்டப். சரி, வாருங்கள் உள்ளே நுழையலாம். ஆண்கள் முதல்முறை என்றால் ஜோடியுடன் போவதுதான் சிறந்தது. சிக்கல் இல்லாமல் உள்ளே நுழையலாம். இருந்தாலும் ஒரு அனுபவத்திற்காக தனிக் கெடாவாக உள்ளே நுழைய வேண்டும் என்றால் 6 மணிக்கு நுழைய வேண்டும். உள்ளே நுழையும்போதே தனி ஆள் என்றால் 8 மணிக்கு வெளியே அனுப்பி விடுவோம் என்பார்கள்.

8 மணிக்கு மேல் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி. உள்ளே நுழைந்து விட்டால் டகால்டி செய்து கொள்ளலாம். அதைப் பிறகு பார்ப்போம். முதலில் பப்புக்குள் நுழைந்து விடுவோம். மணி இப்போது இரவு பத்து என வைத்துக்கொள்ளுங்கள்.  வெடிகுண்டு வைத்திருக்கிறீர்களா என்றெல்லாம் செக் செய்து விட்டு மொறைப்பான கோட் சூட் போட்ட இரண்டு பவுன்ஸர்களைத் தாண்டிச் சென்றால் இரண்டு பெரிய கதவுகள் வரவேற்கும்.

அதைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால் முதலில் இசைதான் நம்மைத் தாக்கும். போஸ் ஸ்பீக்கர்களை வஞ்சனை இல்லாமல் நிரவி வைத்திருப்பார்கள். ‘தும் தும் தும்க் தும்க்...’ என டிரம்ஸ் பீட் நம் உடலில் அதிர்வதை உணர முடியும்!  ஏஞ்சல்களைத் தேடி உள்ளே வந்தவர்களுக்கு முதல் பார்வையில் தட்டுப்படுவது 50ஐக் கடந்த அங்கிள்ஸ்தான். தாத்தாக்களும் யூத் கெட் அப்பில் காணக்  கிடைப்பார்கள்.

அப்புறம் முகத்தை கடுகடுவென வைத்திருக்கும் ஜுனூன் டைப்  வில்லிகள் போன்ற முகங்களையொத்த சில நடுவிளம் மற்றும் கருவிளங்கனி பெண்களைக் காணலாம். எங்கடா ஏஞ்சல் என்று தேடினால் ஏஞ்சலுக்கும்  சாத்தானுக்கும் பிறந்தது போல இருக்கும் ஒரே ஒரு க்ராஸ் ஏஞ்சலைக்
காணமுடியும். துரதிர்ஷ்டவசமாக அந்த க்ராஸ் ஏஞ்சலும் நான்கைந்து  சாத்தான்களோடு வந்திருக்கும். அந்த சாத்தான்கள் ஷிப்ட் போட்டு டூட்டி  பார்க்கும்!

ஒரு சாத்தான் பப்பில் உள்ள மற்ற ஆடவரை நோட்டம் விட்டுக்கொண்டே  இருக்கும். இன்னொன்று பணிவிடைகள் செய்யும்.
அடப்போங்கடா என கிடைக்கும் ஒரு  சீட்டில் சரியலாம். பேரர் வருவார் என காத்திருந்தால் நேரம் போய்க்கொண்டே  இருக்கும்.
மருந்தீஸ்வரர் கோயில் வாசலில் திருவோடு வைத்துக்கொண்டு  அமர்வதைப் போல உட்கார்ந்து கிடக்க வேண்டியதுதான்.

பேரர் எல்லாம்  இருப்பார்கள். மோடிக்கு ஃபைல் எடுத்துக்கொண்டு செல்வதைப்போல வேகமாக அங்கும்  இங்கும் விரைந்து போய்க்கொண்டு இருப்பார்கள், நம்மிடம் வரவே மாட்டார்கள்!அவர்கள் காலரைப் பிடித்து இழுத்து வந்தால் மெனு கார்டை நம் டேபிளில்  தூக்கிப்போட்டு விட்டு மீண்டும் ஜவடேகருக்கு ஃபைல் கொடுக்க  ஓடிவிடுவார்கள். முதல்முறை என்பதால் ஆர்வமுடன் மெனுவை மொத்தமாகப் படிக்க  முயல்வீர்கள்.

சில பப்களில் அராத்துவின் (ஆமாம், அடியேன் எழுதிய நூல்தான்) ‘குறுங்கதைகள்’ போல மெனு  இருந்தாலும் சில பப்களில் ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ போல மெனு இருக்கும்.  அதை மொத்தத்தையும் படித்து முடிக்க மெனுவை வாடகைக்குத்தான் வீட்டுக்கு  எடுத்துப்போக வேண்டும். அதனால் சிறந்த சாய்ஸ் என உடனடியாக ஒரு டிராட்  பியரையும் (இருந்தால்) இல்லையெனில் பிண்ட் பியரையும் டக்கென ஆர்டர் செய்துவிட்டு பப்பை மீண்டும் நோட்டம் விடலாம்.

கூடவே சைட் டிஷ் என்னும் பெயரில் சிக்கன் டிக்கா, மட்டன் ப்ளேட்டர் என ஜம்பமாக ஆர்டர் செய்வதைத்  தவிர்க்கலாம். வேண்டுமென்றால் ஒரு சீஸர் சாலட் ஆர்டர் செய்து கொள்ளலாம். டிஜேவை கவனிக்கலாம். இன்னும் சூடு பிடிக்கவில்லை. அதற்கே அந்த ஆசாமி, தானே  மியூசிக் போட்டது போல என்னா ஆட்டம் ஆடுறான் பாருங்கள். அதற்குள் ஐயாவின்  உழைப்பிற்கு 2 பியர்கள் வேறு காலி. இப்போது நீங்கள் ஆர்டர் செய்த 330  மில்லி பியரின் விலை ரூ.350ல் இருந்து ரூ.1200 வரை இருக்கும். பியர்  மற்றும் ஹோட்டலின் பிராண்டைப் பொறுத்து விலை மாறும்.  



Tags : Even though the pub is only building at eleven o'clock at night, stepping in at ten o'clock will help you look good! Happy Hours until 6pm or 8pm.
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...