கேன்சர் வர உடல் பருமனே காரணம்!

நன்றி குங்குமம்

Advertising
Advertising

இன்று உலகை அச்சுறுத்தும் முக்கிய நோயாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது புற்றுநோய். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இதன் தாக்கம் ரொம்பவே அதிகம்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் கூட இந்நோய் ஆழமாக ஊடுருவிவிட்டது. அதனால் தெருவுக்குத் தெரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் முளைத்துவிட்டன. நல்ல வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்துவிடுகின்றனர். வசதி, வாய்ப்பில்லாத பெரும்பாலானவர்கள் இறுதிக் கட்டத்தில் கண்டறிந்து மரணத்தைத் தழுவுகின்றனர்.

இந்நிலையில் ‘‘புகைபிடித்தலை விட உடல் பருமன்தான் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு. இங்கிலாந்தைச் சேர்ந்த ‘மெட்ஸ்கேப்’ என்ற மருத்துவ நிறுவனம் பல ஆண்டுகளாக புற்றுநோய் குறித்து ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் பால்புட்டியால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை உலகுக்குத் தெரிவித்ததும் இந்த நிறுவனம்தான். குடல், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் உட்பட 13 வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது உடல் பருமன்தான் என்று அடித்துச் சொல்கிறது அந்த ஆய்வு.

இந்த வகையில் உலகம் முழுவதும் உடல் பருமன் காரணமாக பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

‘புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் அளவுக்கு அதிகமான உடல் பருமனும் புற்றுநோயை உண்டாக்கும்’ என்று நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது அந்த ஆய்வு முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

உடல் பருமன் உடைய எல்லோரையுமே புற்றுநோய் தாக்காது என்பது இதில் சின்ன ஆறுதல். ஆனால், தேவையில்லாமல் உடல் பருமன் அதிகரிக்கும்போது புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று ஆலோசனை தருகிறார்கள் மருத்துவர்கள்.       

Related Stories: