×

7 பேர் விடுதலை தொடர்பாக நளினி வழக்கு: தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது...அரசு உயர்நீதிமன்றத்தில் வாதம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை  கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்  மத்திய அரசு  இவர்களை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டி வந்தது. இது தொடர்பான வழக்கில் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச  நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சுதந்திரராஜா, ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ்,  ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பேரறிவாளன் என்பவரின் மனுவை இந்திய அரசியலைப்பு சட்டப்பிரிவு 161ன் கீழ் பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டிருந்த  போதிலும், இவரை தவிர மேலும் 6 நபர்களும் முன்  விடுதலை மனுக்களை ஆளுநர் மற்றும் அரசுக்கு முகவரி இட்டு அளித்திருந்ததை கருத்தில் கொண்டு அவர்களையும் சேர்த்து, மேற்காணும் 7 நபர்களையும் முன் விடுதலை செய்ய  ஆளுநருக்கு மேற்படி சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், 6 மாதங்கள் கடந்தும் இந்த பரிந்துரையை ஆளுநர் பரிசீலிக்கவில்லை. தொடர்ச்சியாக, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அளித்த மனுவை, பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்  என்று நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு கடந்த ஜூலை மாதம் விசாணைக்கு வந்தபோது, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரை ஆளுநர் பரிசீலனையில் உள்ளதாகவும், ஆளுநருக்கு  நீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா?, இல்லையா? என்பதை முடிவு செய்யும் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தள்ளது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து
நளினி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்படாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : Nalini case: The Governor could not seek clarification on the resolution ...
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்