×

சாதி சான்றிதழ் கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு பாம்புடன் வந்த பழங்குடி மக்கள்

ராமநாதபுரம்: சாதி சான்றிதழ் கேட்டு பழங்குடியின மக்கள் பாம்புடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக, தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பினர் வந்தனர். இவர்கள் அலுவலக வளாகப்பகுதியில் பாம்புகளுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி இருவரை மட்டும் உள்ளே அனுப்பி, கலெக்டர் வீரராகவராவிடம் மனு கொடுக்க செய்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக காட்டுநாயக்கன் இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாழும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் பெறுவது பெரும் பிரச்னையாக இருந்து வந்த நிலையில், 2001ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மானுடவியல் பேராசிரியர்கள் மூலமாக பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களை ஆய்வு செய்து, அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலபார்த்திபனூர், பரமக்குடி தாலுகாவில் உள்ள பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. இதனால் இந்த கிராமங்களில் வாழும் எங்கள் குழந்தைகள், சாதி சான்றிதழ் இல்லாமல் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருந்து வருகின்றனர். எங்கள் இனத்தவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு நடத்தப்படவில்லை. இதனால் சாதி சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு இரண்டுக்கும் சாதி சான்றிதழ் கேட்கின்றனர். அரசு பொதுத்தேர்வு எழுத சாதி சான்றிதழ் வேண்டும். எங்களது குழந்தைகள் கல்வி பயில கலெக்டர் தான் வழி காட்ட வேண்டும்’’ என்றார்.


Tags : Indigenous people
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...