ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 30 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்... கலெக்டர் தகவல்

ஈரோடு: இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் வரும் 22ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் கதிரவன், எஸ்.பி.சக்தி கணேசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், கலெக்டர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 22ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 2ம் தேதி நிறைவடைய உள்ளது. சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 30 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி சீட்டுடன் உரிய ஆவணங்களையும் சேர்த்து கட்டாயம் எடுத்து வர வேண்டும். அனுமதி சீட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி, வருவாய் துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Related Stories: