திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்... ஆவணி திருவிழா கொடிப்பட்டம் வீதி உலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டம் யானை மீது வீதி உலா வந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று (20ம் தேதி) அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. திருவிழா 31ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. ஆவணி திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.

இதையொட்டி வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 4.40 மணிக்கு யானை மீது அமர்ந்திருந்த சங்கரநாராயண அய்யர் கொடிப்பட்டத்தை ஏந்தியவாறு 8 வீதிகளிலும் உலா வந்து கோயிலுக்கு சென்றடைந்தார். கோயில் கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, சுப்பிரமணியன், ஆய்வாளர் முருகன், எழுத்தர் பிச்சையா, செங்குந்த முதலியார் மண்டபத்தின் பொருளாளர் மாரியப்பன், இணைதலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆவணி திருவிழாவில் இன்று மாலை 4 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்து திருக்கோயில் சேர்தல். இரவு 7 மணிக்கு பலிநாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு 9 சந்திகளிலும் உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனங்களிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: