×

தண்ணீர் தட்டுப்பாட்டால் தக்காளி விளைச்சல் பாதிப்பு... நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் தக்காளிப்பழம் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சிறிய அளவிலேயே விளையும் தக்காளி கிலோ ரூ.2 என்ற அளவிலேயே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சரியான பருவமழை பெய்யவில்லை. தற்போது தென்மேற்கு பருவமழையும் மிகவும் காலதாமதமாக அதுவும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டுமே பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள எந்த கால்வாய்களிலும் விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. குற்றாலம் அருவிகளில் விழும் நீர் சிற்றாருக்கு முழுமையாக பாயவில்லை. இதனால் காய்கனி பயிரிடுவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய்கள், குளங்கள் வறண்டு கிடப்பதால் கிணற்று பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் போதிய நிலத்தடி நீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தக்காளி, வெண்டை, கத்தரி போன்ற காய்கனிகள் விளைச்சலும் நஷ்டத்தை சந்திக்க வைத்துள்ளது. நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே கோவிந்தபேரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தக்காளிப்பழம் அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

ஆனால் இதனை ஒட்டியுள்ள கிணறுகள் மற்றும் குளங்களில் நீர் வற்றி விட்டது. அருகே ஓடும் சிற்றாறு கால்வாயிலும் தண்ணீர் இல்லை. வழக்கமாக இந்த கால்வாயில் ஆவணி மாதத்தில் தண்ணீர் ஓடும். ஆனால் பருவமழை சீராக பெய்யாததால் கால்வாய் வறண்டு கிடக்கிறது. ஆயினும் சில விவசாயிகள் கிடைக்கும் குறைந்த அளவு நீரை நம்பி அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். ஆனால் போதிய தண்ணீர் கிடைக்காததால் தக்காளிப்பழம் விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. முதல் பறியிலேயே மிகவும் சிறிய அளவில்தான் தக்காளிப்பழம் விளைந்துள்ளது. இதற்கு போதிய விலை கிடைக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் சிறிய அளவில் விளைந்துள்ள தக்காளிப்பழங்களை கிலோ ரூ.2 அல்லது ரூ.3 என்ற விலையிலேயே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஓரளவு விளைந்த தக்காளிப்பழத்திற்கும் அதிகபட்ச கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 என்ற அளவிலேயே கிடைக்கிறது. இதனால் கடும் நஷ்டம் ஏற்படுகிறது. தண்ணீர் கிடைக்காததால் சில பகுதிகளில் லாரிகளில் வாடகைக்கு எடுத்து தண்ணீர் விடுகிறோம். பறிகூலி, நடவு போன்ற பணிகள் காரணமாக தக்காளிப்பழ பாசனத்திற்கு போட்ட பணம் கூட கிடைப்பதில்லை. சிறிய பழங்களை பறிக்காமலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நன்றாக பெய்து கால்வாயில் தண்ணீர் வந்தால் மட்டுமே காய்கனி விளைச்சல் பலனை தரும் என்றனர்.

Tags : Water shortage
× RELATED செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம்...