நீர் சேகரிப்பில் தமிழகத்திற்கே வழிகாட்டும் திருப்புல்லாணி

கீழக்கரை: வறட்சியிலும் திருப்புல்லாணி பகுதியில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்தே உள்ளது. இதற்கு சிறந்த நீர் மேலாண்மையே காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பை துரிதப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சியில் கவுன்சிலராக இருந்த ரமேஷ்பாபு தலைமையில் சமூக ஆர்வலர்கள் சேதுபாண்டியன், செந்தீஸ்வரன், கிருஷ்ணகுமார், பாலசுப்ரமணியன், சரவணபாண்டி ஆகியோர் அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த விஜயகுமாரிடம் தங்களது மழைநீர் சேகரிப்பு திட்டத்தை எடுத்து கூறினர். இதற்காக கலெக்டர், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கினார். இந்த நிதியை வைத்து கொண்டு மழைநீர் சேகரிப்பை செயல்படுத்தியதால் இன்று வரை திருப்புல்லாணியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை வரும் காலங்களில் சக்கரகோட்டை கண்மாயில் மழைநீர் நிறைந்ததும் வரத்து கால்வாய் வழியாக ராமானுஜம் பேரி கண்மாய் செல்லும். பின்னர் பொண்ணங்கழி கானல் நீரோடை வழியாக தோணிபாலம் சென்று, அங்கிருந்து சேதுக்கரை கடலில் கலந்து யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் வீணாகி வந்தது.

இந்நிலையில் கலெக்டர் கொடுத்த நிதியை ஆதாரமாக கொண்டு பொண்ணங்கழி கானல் நீரோடையில், அணைகட்டி பூமிக்கடியில் 20 இன்ச் சிமென்ட் பைப்பு சுமார் 300 அடி தூரத்திற்கு புதைத்து பிள்ளையார் குட்டம் அருகில் மோட்டார் பம்பு அமைக்கப்பட்டது. பின்னர் அதன் அருகே 20 அடி அகலத்தில் 100 அடி ஆழத்தில் கிணறு போன்று அமைத்து இரண்டு மோட்டார்கள் வைத்து பம்பிங் செய்து 10 ஏக்கர் பரப்பளவும் சுமார் 15 அடி ஆழமும் கொண்ட பிள்ளையார் குட்டத்திற்கு மழைநீர் வரும். அங்கு நிறைத்ததும் தண்ணீர் 8 ஏக்கர் பரப்பளவும் 15 அடி ஆழமும் கொண்ட மதகு குட்டம் ஊரணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து 10 ஏக்கர் பரப்பளவும் 25 அடி ஆழமும் கொண்ட ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் தெப்பகுளத்திற்கு தண்ணீர் வந்து நிறைந்து விடுகிறது. இதுபற்றி சேதுபாண்டின் கூறுகையில், சென்ற வருடம் பருவ மழை பொய்த்ததாலும் தற்போது கடும் கோடை காலமாக உள்ள சூழலிலும் அந்த மூன்று குளங்களிலும் 10அடி உயரத்திற்கு தண்ணீர் கிடக்கின்றது, இதனால் இப்பகுதியில் நிலத்தடிநீர் குறையாமல் உள்ளது, இதனால் அனைத்து வீடுகளிலும் உள்ள கிணறுகளில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் கிடைக்கின்றது.

செந்தீஸ்வரன் கூறுகையில், சென்ற வருடம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக முஸ்லீம் தெருவில் உள்ள பள்ளிவாசல் ஊரணியிலும் தண்ணீர் நிறைத்தோம். தற்போது அந்த ஊரணியில் மட்டும் தண்ணீர் வறண்டுள்ளது, காரணம் தூர்வாராமல் இருந்ததால்தான். மேலும் இந்த தண்ணீர் சேமிப்பு முறைக்கு மொத்த மின்சார செலவு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகிறது. ஆகவே இதுபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால் திருப்புல்லாணி ஊராட்சி போல் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் போய்விடும் என்றார்.

Related Stories: